Wednesday, November 20, 2024

சினிமா வரலாறு-28 – முதல் படத்தில் இளையாராஜா சந்தித்த எதிர்ப்புகள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இளையராஜா பாடிக் காட்டிய ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே…’, ‘மச்சானைப் பாத்தீங்களா..?’ ஆகிய இரண்டு பாடல்களின் மெட்டுக்களும் பஞ்சு அருணாச்சலத்தை மிகவும் கவர்ந்தபோதிலும் அதைப் பற்றி ராஜாவிடம்  எதுவும் சொல்லாமல் அந்தப் பாடல்கள் பற்றியே அவர் சிந்தித்துக் கொண்டிருந்தபோது  கிளம்புவதற்காக எழுந்தார் ராஜா. 

ராஜா எழுந்ததைப் பார்த்தவுடன் “எங்கே கிளம்பிட்டே..? நீ பாடிய பாடல்களை இன்னொரு தரம் பாடு” என்றார்  பஞ்சு அருணாச்சலம். ராஜா மீண்டும் பாடியவுடன் செல்வராஜைப் பார்த்து அவர் லேசாக சிரிக்க… தான் எந்த நோக்கத்திற்காக ராஜாவை அழைத்துக் கொண்டு வந்தோமோ, அது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை செல்வராஜிற்கு பிறந்தது.

அதன் பிறகு “பாட்டெல்லாம் நல்லா இருக்கு. நான் சொல்லி அனுப்புறேன்…” என்று சொல்லி ராஜாவை அனுப்பி வைத்தார் பஞ்சு அருணாச்சலம். 

அந்த அறையைவிட்டு வெளியே வந்தபோது ராஜாவிற்கு பெரிதாக நம்பிக்கை பிறக்கவில்லை என்பதை அவரது முகத்தைப் பார்த்து தெரிந்து கொண்ட செல்வராஜ் “நிச்சயம் நீ மியுசிக் டைரக்டர் ஆகி விடுவ. பஞ்சு சாருக்கு உன் பாடல்கள் எல்லாம் ரொம்ப படிச்சுப் போச்சி என்பதை அவர் முகத்தைப் பார்த்தே நான் தெரிஞ்சிகிட்டேன். நீ கிளம்பு. நான் சீக்கிரமே  நல்ல செய்தியோடு வருகிறேன்…” என்று சொல்லி ராஜாவை வழியனுப்பி வைத்தார்.

இசையமைப்பாளருக்கான பரீட்சையில்  ராஜா முதல் வகுப்பில்  தேறிவிட்டார் என்பதை உணர்ந்திருந்தபோதிலும் பஞ்சு அருணாச்சலம்  வாயால் அதைக் கேட்க விரும்பிய செல்வராஜ், “எப்படி சார்  இருக்கு பாட்டு…?’ என்று அவரிடம் கேட்டார். 

“ரொம்ப வித்தியாசமா இருக்கு. இந்த அளவுக்கு திறமை உள்ளவனா இருப்பான்னு நீ சொன்னபோது நான் நினைக்கலே. இவன் ரொம்பப் பெரிய மியுசிக் டைரக்டரா வர்றதுக்கான எல்லா சான்சும்  இருக்கு…” என்றார் பஞ்சு.

இளையராஜா பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகமானபோது ‘மயங்குகிறாள் ஒரு மாது’. ‘துணிவே துணை’ ஆகிய படங்களுக்கும், வேறு சில படங்களுக்கும்  அவர் கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் செய்த மிகப் புத்திசாலித்தனமான காரியம் என்னவென்றால், அப்போது  பணியாற்றிக் கொண்டிருந்த எந்தப் படத்திலும் ராஜாவை பயன்படுத்திக் கொள்ளாததுதான்.

தான் பாடிக் காட்டிய பாடல்களை எல்லாம் கேட்டுவிட்டு மிகவும் பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டிய பஞ்சு அருணாச்சலம் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் தன்னை ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று இளையராஜா வருத்தத்தில் ஆழ்ந்திருந்தபோது இளையராஜாவை அறிமுகப்படுத்த சரியான ஒரு  கதைக்காக, இரவு பகலாக யோசித்துக் கொண்டிருந்தார் பஞ்சு அருணாச்சலம்.

‘இளையராஜா தன்னிடம் வாசித்துக் காட்டிய அருமையான மெட்டுக்களை பயன்படுத்திக் கொள்கின்ற மாதிரி இசை சார்ந்த படமாக அது இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த பஞ்சுவின் மனதிற்குள் மின்னல் வெட்டியதுபோல விஜய பாஸ்கர் பிலிம்சுக்காக ஆர்.செல்வராஜ்  சொன்ன மருத்துவச்சி கதை நினைவுக்கு வந்தது.

அந்தக் கதையில் இளையராஜா பாடிக் காட்டிய கிராமிய இசைப் பாடல்களை  இணைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருந்ததால் இளையராஜாவை தனக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர் ஆர்.செல்வராஜின் கதையிலேயே இளையராஜாவை  அறிமுகப்படுத்துவது என்று முடிவெடுத்தார் பஞ்சு 

இளையராஜா பாடிக் காட்டிய ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்ற பாடல் வரிகளில் இடம் பெற்றிருந்த ‘அன்னக்கிளி’ என்ற பெயரே அந்தப் படத்தின் பெயரானது. அடுத்து திரையிலே என்ன பெயரில் இளையராஜாவை அறிமுகம் செய்வது என்று பஞ்சு அருணாச்சலம் யோசித்தபோது ‘ராஜா சகோதரர்கள்’, ‘பாவலர் பிரதர்ஸ்’ என்று போடலாம் என்றெல்லாம் பலரும் யோசனை கூறினார்கள்.

ஆனால், அந்தப் பெயர் மிகவும் பழைய பேராக இருக்கிறது  என்று சொன்ன  பஞ்சு அருணாச்சலம் இளையராஜா என்று காலத்திற்கும் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு அழகான பெயரை அவருக்கு சூட்டினார்.

அதற்குள் தனது சகோதரர் கே.என்.சுப்பு தயாரிக்க இருக்கின்ற புதிய படத்தில் பஞ்சு அருணாச்சலம் புதிதாக ஒரு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீ போல் சினிமா உலகில் பரவியது.

அப்போது  பஞ்சு அருணாச்சலம் அவர்களின் படங்களில் அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்த  இசையமைப்பாளர் விஜயபாஸ்கரின் உதவியாளரான குருபாதம் இளையராஜாவை  பஞ்சு அருணாச்சலம் அறிமுகப்படுத்தப் போகும் செய்தி கேட்டு அதிர்ந்து போனார்.

‘அன்னக்கிளி’ படத்தின் தயாரிப்பாளரான சுப்புவை சந்தித்த அவர் ‘பஞ்சு சார் – விஜயபாஸ்கர் கூட்டணி ஹிட் ஆன கூட்டணி சார். அதனாலதான் அவங்க இரண்டு பெரும் இணைந்து பணியாற்றிய ‘உறவு சொல்ல ஒருவன்’, ‘எங்கம்மா சபதம்’, ‘மயங்குகிறாள் ஒரு மாது’ன்னு எல்லா படமும் ஹிட்டாச்சின்னா அதுக்குக் காரணம் ஜாதகப்படி அவர் ஸ்டாரும், இவர் ஸ்டாரும் நன்றாக ஒத்துப்  போவதுதான். அப்படியிருக்கும்போது அதை ஏன் மாத்துறீங்க..? எதுக்கு தேவையில்லாத விஷப் பரீட்சை…?” என்று சுப்புவிடம் கேட்டார்.

அவர்  சொன்னதைக் கேட்டு சுப்பு லேசாக குழப்பமடைய அதைக் கண்ட குருபாதம் அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று  “சார்..! இந்த ராஜா ஜி.கே.வெங்கடேஷ்கிட்டே கிடார் வாசிக்கிறவர். ஏற்கனவே ‘அன் லக்கி மியூசிக் டைரக்டர்’ என்று பெயர் எடுத்தவர். அவரை மியூசிக் டைரக்டராக வச்சி பூஜை போட்ட பல படங்கள் பூஜையோடு நின்னு போயிருக்கு…” என்றெல்லாம் சொல்லி சுப்புவை பலமாகக் குழப்பினார். 

அவர் சொன்னதைக்  கேட்டவுடன்  பயந்த சுப்பு நேராக பஞ்சு அருணாச்சலத்தை சந்திக்கப் போனார். “எதுக்கு நமக்கு ரிஸ்க்..? உங்களோட பல படங்களில்  பணியாற்றி  இருக்கும் விஜய பாஸ்கரையே இந்த படத்துக்கும் போடுங்க. இல்லே.. அவரை மாத்தலாம்னு நினைச்சீங்கன்னா விஸ்வநாதன் சாரை போடுவோம்.. .அவருக்குன்னு ஒரு தனி மார்க்கெட் இருக்கிறதினால  நம்ம படத்திற்கு அவர் மியுசிக் போட்டா.. அது படத்துக்கே ஒரு மெரிட்டா இருக்கும்…” என்றார்.

அவர் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த பஞ்சு அருணாச்சலம் “அன்னக்கிளி’ படத்துக்கு இளையராஜாதான் மியூசிக்!’ என்று ஒரேயடியாக அடித்து சொன்னார்.

“படத்திற்கு இளையராஜாவைத்தான் இசையமைப்பாளராக போட வேண்டுமா என்று ஒரு முறைக்கு, இரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்” என்று பஞ்சு அருணாச்சலத்திற்கு யோசனை கூறினாரே.. அந்த  சுப்புதான் ‘அன்னக்கிளி’ படத்திற்கு தயாரிப்பாளர்.

இருந்தாலும் அவரிடமே இளையராஜாதான் படத்துக்கு இசை என்று தீர்மானமாக பஞ்சு அருணாச்சலத்தால் சொல்ல  முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அந்தப் படத்தின் ஆணி வேராக அவர் இருந்ததுதான்.

அந்த முதல் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் படம் முடியும் வரை பல போராட்டங்களை சந்தித்தார் இளையராஜா.

பூஜைக்கான  தேதி குறிக்கப்பட்டவுடன் பாடல்களை எழுத கண்ணதாசனை  அழைப்பது என்று முடிவானது. இளையராஜாவிற்கு ஆனந்தம் என்றால் அப்படி ஒரு ஆனந்தம். தான் இசையமைக்கப் போகும் முதல் படத்திலேயே அந்த மாபெரும் கவிஞர் பாட்டெழுதப் போகும் பூரிப்பில் இளையராஜா இருந்தபோதுதான் கவிஞர் கண்ணதாசன்  சிங்கப்பூர் செல்லவிருக்கின்ற செய்தி அவருக்குக் கிடைத்தது.

“எப்போது திரும்பி வருவார்..?” என்று கேட்டபோது  “படத்தின் பூஜை முடிந்த பிறகுதான் திரும்பி வருவார்” என்று பதில் வந்தது. கண்ணதாசன் இல்லாததால் படத்தின் பூஜையே தள்ளிப்போய்விடுமோ என்று இளையராஜா பயந்தபோது  “பூஜையை நிறுத்தவேண்டாம். நானே பாட்டு எழுதி விடுகிறேன்..’ என்ற பஞ்சு அருணாச்சலம் ஒரே நாளில் பாடல்களை எழுதித் தந்தார்.

‘அன்னக்கிளி’ படத்தின் தொடக்க விழா ஏவி.எம்.ஸ்டுடியோ ரிக்கார்டிங் தியேட்டரில்  நடைபெற்றது.

தனது சகோதர்கள் பாஸ்கர், அமர்சிங் என்கிற கங்கை அமரன் ஆகியோரோடு காலையிலேயே திருவேற்காடு கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு  ஸ்டுடியோவுக்கு வந்தார் இளையராஜா.

பூஜை முடிந்து, ரிகர்சல் தொடங்கியது. ஆர்க்கெஸ்ட்ராவெல்லாம் அமர்ந்து, ‘ரெடி, ஒன், டூ, த்ரி’ என்று இளையராஜா சொன்ன அடுத்த  நொடி மின்சாரம் ‘கட்’ ஆக எல்லா விளக்குகளும் அணைந்து ஸ்டுடியோவில் இருள் சூழ்ந்தது.

இளையராஜாவிற்கும், அவரது சகோதர்களுக்கும் அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி.

அந்த நேரம் பார்த்து டோலக் வாசிக்க வந்திருந்த பாபுராஜ் என்பவர் `நல்ல சகுனம்தான்’ என்று சொல்ல அப்படியே நொறுங்கிப் போன  இளையராஜா யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக நடந்து போய் பாடகர்கள் பாடுவதற்காக உள்ள அறைக்கு சென்று உட்கார்ந்தார்.

அந்த நேரத்தில் இளையராஜாவை வாழ்த்துவதற்காக வந்தார் இயக்குநர் பி.மாதவன். ஜி.கே.வெங்கடேஷிடம் பணியாற்றிய காலத்திலேயே ராஜாவை நன்கு அறிந்த இயக்குநர் அவர்.

பாடல் பதிவு தொடங்கிய நேரத்தில் கரண்ட் போனதால் இளையராஜா மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்திருக்கும் விஷயம் அவருக்கு சொல்லப்பட்டதும் ராஜா இருந்த அறைக்கு வந்த அவர் “உனக்காக மாங்காடு அம்மன் கோவிலுக்குப் போய்  வேண்டிக் கொண்டு பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். இந்தா பிரசாதம்…” என்றபடி இளையராஜாவின் கையில் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு “நான்தான் உனக்கு சான்ஸ் கொடுக்கணும்ணு நினைத்தேன். ஆனால் பஞ்சு முந்திக் கொண்டு விட்டார். இந்த கரண்ட் போன விஷயத்தை எல்லாம் நினைச்சிக்கிட்டு  மனதைத் தளர விடாதே. நிச்சயம் நீ பெரிய ஆளாக வருவாய்…” என்றார்.

“அவர்  பேசியதை நான் அவர் பேசிய பேச்சாகவே அன்றைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அந்த மாங்காடு அம்மனே அவர் மூலம் ஆறுதல் கூறியதாகத்தான் எடுத்துக் கொண்டேன் ” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் இளையராஜா.

பி.மாதவன் அவர்களின் பேச்சால் இளையராஜா ஆறுதல் அடைந்த அந்த நேரத்தில் போன மின்சாரம் திரும்ப வந்தது.

அதைத் தொடர்ந்து எஸ்.ஜானகி ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்ற பாடலைப் பாடி முடித்தார். அவர் பாடி முடித்தவுடன் அந்தப் பாடல் ஒளிப்பதிவுக் கூடத்தில் இருந்த எல்லோருமே ராஜாவின் திறமையைப் பாராட்டி கை தட்டினார்கள்.

இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு பதிவான அந்த ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்ற பாடல் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

‘அன்னக்கிளி’ படம் திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களிலும் அந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும்  ஹம்மிங்கை  கேட்ட உடனேயே ரசிகர்கள் பலமாக கை தட்ட தொடங்கினர்.

நாற்பது வருடங்களுக்கு முன்னாலே பஞ்சு அருணாச்சலம் தொடங்கி வைத்த இளையராஜா என்னும் அந்த இசை ஊற்று வற்றாத ஜீவ நதியாக மாறி இன்றும்  இசை ரசிகர்களின் காதுகளில் தேனைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.

(தொடரும்)  

- Advertisement -

Read more

Local News