நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தீபாவளிக்குப் பிறகு தொடங்கும் என இயக்குநர் ரவி அரசு தெரிவித்திருந்தார் .

இந்நிலையில், விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் தனது சினிமா வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார். ‘Unfiltered Side of Vishal’ எனும் தலைப்பில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். அதில் விருதுகள் குறித்து அவர் கூறிய பார்வை இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஷால் பேசுகையில் கூறியதாவது: “எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம். நான்கு பேர் உட்கார்ந்து 7 கோடி மக்களுக்கு பிடித்த விஷயங்களை சொல்ல வேண்டியவர்கள் யார்? நான் தேசிய விருதையும் சேர்த்து சொல்கிறேன். தேசிய விருதுகளுக்கு கமிட்டி இருக்கிறது, ஆனால் மக்கள் சர்வே எடுக்க வேண்டும். நான் விருது வாங்கவில்லை என்பதால் இதைச் சொல்கிறேன். எனக்கு விருது கொடுத்தால், அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவேன். சில நேரங்களில் அது தங்கமாக இருந்தால், அதை விற்று அன்னதானத்திற்கு கொடுக்கிறேன். எனக்கு விருது கொடுக்க வேண்டாம். அதற்குத் தகுதியான மற்ற சிறந்த கலைஞர்களுக்கு கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.