நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் ‘டெஸ்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். சில காரணங்களால் திரையரங்குகளில் இப்படம் வெளியாகாமல் இருந்தாலும், ஓடிடியில் வெளியானபின்னும் படத்திற்கான விளம்பர வேலைகளில் எந்தவொரு சலனமும் இல்லாமல், இதில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் தொடர்ந்து அதில் பங்கேற்று வருகின்றனர். பொதுவாக விளம்பர நிகழ்ச்சிகளில் வராமல் தவிர்த்து வரும் நயன்தாரா கூட, இந்தப் படத்துக்காக தொடர்ந்து விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடித்த மீரா ஜாஸ்மினை பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். மீரா ஜாஸ்மின் மற்றும் நயன்தாரா இருவரும் கேரளத்தில் உள்ள திருவல்லா என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில், வெவ்வேறு காலகட்டங்களில் கல்வி கற்றுள்ளனர். குறிப்பாக, மீரா ஜாஸ்மினின் உறவுப் பெண் ஒருவர் நயன்தாராவுடன் ஒரே வகுப்பில் படித்துள்ளார்.
மீரா ஜாஸ்மினை பற்றி நயன்தாரா கூறியதாவது: “நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், மீரா ஜாஸ்மின் என்ற பெயர் எங்கும் முழங்கிக் கொண்டிருந்தது. அவரது உறவுக் கார பெண் என்னுடைய வகுப்பில் படித்ததாலே, ஒவ்வொரு நாளும் மீரா ஜாஸ்மின் பற்றிய கதைகள், செய்திகள் என்னிடம் வந்து சேரும். அவ்வபோது ‘மீரா ஜாஸ்மின் இப்போது ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறார்’, ‘பாடல் காட்சிகளில் நடிக்கிறார்’ என்று பெருமையாக அவர் பேசி வந்தார். அவையெல்லாம் கேட்டுப் பெரிதும் பிரமித்து வந்தேன். 2002ஆம் ஆண்டில் நான் சினிமாவில் என் பயணத்தை ஆரம்பித்தபோது, மீரா ஜாஸ்மின் ஏற்கனவே பெரிய நடிகையாக உயர்ந்திருந்தார். அவர் பெயர் என் காதுகளில் விழாத நாள் இல்லாத அளவுக்கு பரவலாக இருந்தது. அந்த வகையில், எனக்கு ஊக்கமாக அமைந்தவர்களில் ஒருவர் மீரா ஜாஸ்மின்தான்” என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.