அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வந்தது. மேலும், இதன் வெளியீட்டு தேதி பல முறை மாற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், பல தடைகளை கடந்து ‘விடாமுயற்சி’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் குமார் நடிப்பில் வந்த படம் என்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகமாக திரையரங்குகளுக்கு திரண்டு வந்தனர். பேனர்களுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பு, பாட்டு, ஆட்டம் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.திரைப்பட உலகத்தினருக்கும் இப்படம் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. காலை 9 மணிக்கு வெளியான சிறப்பு காட்சியை இசையமைப்பாளர் அனிருத், நடிகை திரிஷா ஆகியோர் வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்.
கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு, ‘Good Bad Ugly’ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்த ஆரவ் சிறப்பு காட்சியை காண வந்தனர். ஆரவ் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.இந்நிலையில், ‘விடாமுயற்சி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.