Saturday, September 14, 2024

‘டீன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரை விமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமா உலகில் எப்போதும் வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் முயற்சியில் இடைவிடாமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இந்த முறையும் புதிய முயற்சியை “டீன்ஸ்” படம் மூலம் கொடுத்துள்ளார். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், நம் நாட்டிலும் வெளிநாடுகளைப் போல பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதை நாமே கையில் எடுக்க வேண்டும் என எண்ணும் சிறுவர்கள், ஸ்கூலை கட் அடித்து ஒரு பெண்ணின் சொந்த கிராமத்திற்கு செல்கின்றனர். அந்த ஊரில் ஒரு பேய் இருப்பதாக அந்த பெண் கூற, அந்த பேயை பார்த்து விட வேண்டும் என முடிவெடுத்த 13 சிறுவர்கள் பாதை மாறி ஒரு காட்டுப் பகுதிக்கு செல்கின்றனர். சென்ற இடத்தில் ஒவ்வொரு சிறுவர்களாக தானாகவே அமானுஷ்யமாக காணாமல் போகின்றனர்.

இதனால் மற்ற சிறுவர்கள் அதிர்ச்சி, பதற்றத்தில் அலறுகின்றனர். தங்கள் உயிரைக் காப்பாற்ற அனைவரும் தப்பி ஓடுகின்றனர். வழியில் மீண்டும் ஒருவர் பின் ஒருவராக அமானுஷ்ய முறையில் காணாமல் செல்கின்றனர். இவர்களுக்கு உதவ பார்த்திபன் வருகிறார். அமானுஷ்யமாக காணாமல் போன சிறுவர்கள் எப்படி மாயமானார்கள், அவர்கள் கிடைத்தார்களா, இல்லையா, இவர்களை பார்த்திபன் காப்பாற்றினாரா என்ற கேள்விகளே இப்படத்தின் மீதி கதை.

எப்போதும் புதிய முயற்சியில் ஈடுபடும் பார்த்திபன், இந்தப் படத்தையும் புதுவித கதை கருவை வைத்துக் கொண்டு, அதற்கேற்றவாறு புதுவிதமான திரைக்கதை அமைத்து, ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். 13 ஜென் ஆல்ஃபா சிறுவர்களை வைத்து, அவர்களுக்குள் நடக்கும் ஹைடெக் பேச்சுக்களும், அதற்கேற்ற உடல் மொழிகளையும் வைத்து, திரைக்கதையையும் வித்தியாசமாக அமைத்து, புதுவித அனுபவத்தை “டீன்ஸ்” மூலம் கொடுத்துள்ளார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது.

முதல் பாதி முழுவதும் அமானுஷ்யம் கலந்த திகிலான காட்சிகளாக நகர, இரண்டாம் பாதியில் படம் வேறு ஒரு பாதையில் பயணித்து, விஞ்ஞான ரீதியாக தீர்வு காண்பித்து முடிகிறது. படம் ஆரம்பத்தில் புதுமையான விஷயம் கொடுக்கப் போகிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. படத்திலும் காட்சிகளில் பெரிதாக திருப்பங்கள் இல்லாமல், ஒரே பிளாட்டாக நகர்ந்து, கதையில் தெளிவில்லாமல் குழப்பமாக நகர்ந்து பார்ப்பவர்களை சோதிக்க வைத்திருக்கிறது. பார்த்திபனின் புதிய முயற்சியையும் பாராட்டலாம், ஆனால் திரைக்கதையில் முக்கியத்துவத்தை கொடுத்திருந்தால் படம் மைல் கல்லாக இருந்திருக்கும்.

படத்தை தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். ஆபத் பாண்தவனாக வரும் அவர், ஃப்லாஸை ஒரு வழியாக போக்கி, இறுதியில் சோல்யூஷனை கொடுக்கும் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்க முயற்சி செய்துள்ளார். 13 சிறுவர்கள் மிகச் சிறப்பாக நடித்து, தேர்ந்த நடிகர்கள் போல் நடித்து கைதட்டல் பெற்றுள்ளனர். அவர்கள் அவரவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து, தேர்ந்த நடிகர்கள் போல் கவனம் பெற்றுள்ளனர். பல காட்சிகளில் எதார்த்தமான வசன உச்சரிப்புகளை சிறப்பாக கையாள்கின்றனர். யோகி பாபு சில காட்சிகளில் வந்து செல்கிறார், வழக்கமான போலீஸ் அதிகாரியாக நடிகை சுபிக்ஷா நடித்துள்ளார். மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை செய்துள்ளனர்.

கௌமிக் ஆரி ஒளிப்பதிவில் விஞ்ஞான காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டி. இமான் இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை ஓகே. டி. இமான் இசை என்றால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும், ஆனால் இந்தப் படத்தில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியுள்ளார். புதிய முயற்சியாக இப்படத்தை கொடுத்த பார்த்திபன், கதையை புதிய கோணத்தில் காட்சியிட்ட விதத்தை பாராட்டினாலும், திரைக்கதையில் தடுமாறியுள்ளார். “டீன்ஸ்” ஒரு புதுவித அனுபவத்தை தரும், ஒருமுறை பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News