நடிகர் அஜித் குமாரின் புதிய படமான ‘விடாமுயற்சி’யின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இதுவரை சுமார் 70% மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அசர்பைஜானில் தொடங்கப்பட்ட இந்தப் படப்பிடிப்பு அங்கேயே முழுமையாக முடிக்கப்படாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டு சென்னைக்கு திரும்பியுள்ளது.
இதனால், அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், படப்பிடிப்பை முன்கூட்டியே மே 10ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது.
அஜித்திற்கு ஜோடியாக மீனா அல்லது சிம்ரன் இணையலாம் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், பெரிய தொகைக்கு பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்திற்கு சர்வதேச அளவில் பெரிய மார்க்கெட் இருப்பதால், அவரது படத்தின் வெளிநாட்டு உரிமை விற்றிருப்பது பெரிய விஷயம் அல்ல என சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.