ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படம், ‘கேம் சேஞ்சர்’. இதில் நாயகியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, நவீன் சந்திரா, சமுத்திரக்கனி, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இதன் பாடல் காட்சிகளுக்கு மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு மைசூருவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் தொடர்ந்து தாமதமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் கேட்டபோது, “நல்ல, தரமான படங்கள் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும். ராஜமவுலி, சுகுமார், ஷங்கர் போன்ற இயக்குநர்கள், காட்சிகள் தரமாக, தங்களுக்குத் திருப்தியாக வரும் வரை சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். ஷங்கர் அர்ப்பணிப்புள்ள இயக்குநர். இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார். 80% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ரிலீஸ் பற்றி இப்போது முடிவு செய்யவில்லை. படம் முடிந்த பிறகே அதுபற்றி யோசிப்போம்” என்றார்.