நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ வைரலான நிலையில், போலி வீடியோக்களை உருவாக்கி பரப்புபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்ஸ்டாகிராமல் ஜாரா படேல் மிகவும் பிரபலம். இங்கிலாந்துவாழ் இந்தியரான ஜாரா படேல், கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், சிலர் அந்த வீடியோவில், அவரது முகத்துக்குப் பதிலாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து போலி வீடியோவை உருவாக்கி பரப்பியுள்ளனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு பிரபலங்கள், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.
இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த, சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. போலி வீடியோக்கள், புகைப்படங்களை உருவாக்கி வெளியிடுபவர்களுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66டி-யின்படி 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் வீடியோவை நீக்க வேண்டும் என்று சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.