டொமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா கதை நாயகியாக நடித்துள்ள படம் ரெஜினா. ரித்து மந்திரா, ஆனந்த் நாக், பவா செல்லத்துரை, சாய் தீனா, நிவாஸ் அதிதன், விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தன் காதல் கணவன் கொல்லப்பட, ஆதரவற்ற பெண்ணான ரெஜினாவுக்கு எவ்வளவோ நியாயம் கேட்டும் காவல் நிலையத்தின் கதவுகள் சாத்தப்படுகின்றன. இச்சூழலில் ரெஜினா எடுக்கும் முடிவுகள் என்ன, அவற்றின் விளைவுகள் என்ன என்பதே கதை.
எமோஷனல் காட்சிகளில் முயன்றவரை சுனைனா நியாயம் சேர்த்துள்ளார். ஆனால் புரட்சிப் பெண், ராக் ஸ்டார் வகையறா கதாபாத்திரத்தில் போராடி சுனைனாவை திணிக்க முயன்றிருக்கிறார்கள்.
பவா செல்லதுரைக்கு தமிழ் சினிமாவில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் இருந்து இயக்குநர்கள் சிறிது காலம் ஓய்வு தர வேண்டும். மலையாள பிக்பாஸ் புகழ் நடிகை ரித்து மந்த்ராவுக்கும் கிட்டத்தட்ட இதேபோன்ற கதாபாத்திரம்.
மலையாள இயக்குநர் டொமின் டி செல்வாவின் முதல் தமிழ் திரைப்படம். ஆனால் மலையாள திரைப்படம் பார்க்கும் உணர்வே மிஞ்சுகிறது.
சதீஷின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை, திக்குத் தெரியாத திரைக்கதையுடன் சேர்ந்து பின்னணி இசையும் தூக்கத்தையே வரவழைக்கிறது.
கணவனைக் கொன்றவர்களுக்கு எதிராக நியாயம் கேட்டு ரெஜினாவின் அழுகுரலோடு தொடங்கும் படம், இலக்கின்றி எங்கெங்கோ பயணிக்கிறது. இடைவெளி வரையிலுமே என்ன சொல்ல வருகிறார்கள், எங்கே படம் பயணிக்கிறது எனத் தெரியாமல் நம்மை சோர்வடையவைக்கிறார்கள்.
மேலும், ரெஜினாவுக்கு தோள்கொடுக்கும் தோழர்கள், திருநங்கை என அனைத்தும் உச்சக்கட்ட செயற்கை. இதற்கு மேல் சிங்கம், புலி என பஞ்ச் டயலாக் பேசவிட்டு சுனைனா ரசிகர்களையே காண்டாக்குகிறார்கள்!