‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட 28 படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்.
1994-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரண்மனை காவலன்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் கே.முரளிதரன்.
தொடர்ந்து தனது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சுவாமிநாதன், முரளிதரன் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ‘மிஸ்டர் மெட்ராஸ்’, விஜயகாந்தின் ‘தர்மசக்கரம்’, விஜய் நடிப்பில் ‘பிரியமுடன்’, அஜித் நடிப்பில் ‘உன்னைத் தேடி’, கமலின் ‘அன்பே சிவம்’, ‘சிலபம்பாட்டம்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக ஜெயம் ரவி நடித்து 2015-ம் ஆண்டு வெளியான ‘சகலகலாவல்லவன்’ என்ற படத்தை தயாரித்திருந்தார்.
இதில் தயாரிப்பாளர் சுவாமிநாதன் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த நிலையில் முரளிதரன் இன்று தன்னுடைய குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றார். அப்போது மலை படி ஏறும்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் அவர் மரணம் அடைந்துவிட்டார். அவருடைய உடல் இன்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டு நாளை சென்னையில் இறுதி காரியங்கள் நடைபெறவுள்ளது.
முரளிதரன் மறைவுக்கு தமிழ்த் திரைப்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.