எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருடனும் பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நாகேஷ். சிறந்த நடிகர் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அவர் குறித்து நடிகர் மதன்பாபு ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.
“நாகேஷ் சிறந்த நடிகர் என்பதோடு அனைவரிடமும் அன்பாக பழகுவார். ஆனால் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதுவும் படப்பிடிப்புக்கு வரும்போதே காலையிலேயே மது அருந்துவிட்டு வருவார். எம்.ஜி.ஆருடன் நடிக்க வேண்டிய ஒரு காட்சி… அப்போதும் அப்படி வந்துவிட்டார் நாகேஷ். எம்.ஜி.ஆரோ மது, புகை பழக்கம் இல்லாதவர். அதோடு பிறரும் அந்தப் பழக்கத்துக்கு அடிமையைகி விடக்கூடாது என நினைப்பவர்.
வழக்கமாக படப்பிடிப்புக்கு வரும்போது, எம்.ஜி.ஆருடன் வந்து கைகுலுக்கிவிட்டுச் செல்லும் நாகேஷ் அன்று ஓரமாக ஒதுங்கிப் போய்விட்டார். இது எம்.ஜி.ஆருக்கு உறுத்தலாக இருக்கவே, அவரை அழைத்தார். அவரோ பயந்துகொண்டு ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக்கொண்டே இருந்தார்.
பிறகு எம்.ஜி.ஆர். அதட்டியவுடன் நாகேஷ் வந்தார். எம்.ஜி.ஆருக்கு உண்மை தெரிந்தது.
அவர், ‘பார்த்தாயா.. மதுப் பழக்கம் என்பது.. உன் தைரியத்தையே குறைத்துவிட்டது. கம்பீரத்தை குறைத்துவிட்டது. எனக்கு பயந்து செல்லும் நிலைக்கு ஆளாக்கிவிட்டது. இனி மதுவைத் தொடாதே’ என்று அறிவுரை கூறினார்.
அதிலிருந்து எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு என்றாலே மதுவைத் தவிர்த்துவிடுவார் நாகேஷ்!” என்றார் மதன்பாபு.