நடிகர் மற்றும் எம்.எல்.ஏவுமான உதயநியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ஏராளமான படங்களை விநியோகம் செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட அஜித் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
“தமிழ் திரைப்படங்கள் எல்லாவற்றையும் ரெட் ஜெயண்ட் தான் வெளியிடுகிறது” என சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.
ஆனால், திரைப்பட ஊடகவியலாளர் அந்தணன் இதை வேறு கோணத்தில் பார்க்கிறார். அவர், “முன்பெல்லாம் விநியோகஸ்தர்கள் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தனர். படம் வெற்றிகரமாக ஓடினாலும், வசூலை தங்களிடம் வைத்துக்கொள்வார்கள். பொய்க்கணக்கு காட்டுவார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. விநியோகஸ்தர்கள் கொடுத்த பண நெருக்கடியால் அடுத்தடுத்த படங்கள் தயாரிப்பதும் சிக்கலாகியது.
ஆனால் இப்போது ரெட் ஜெயண்ட் விநியோகிக்கும்போது, நேரடியாக திரையரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறது. கணக்கு வழக்கு சரியாக வருகிறது. தயாரிப்பாளர்கள் மன நிறைவுடன் இருக்கிறார்கள். முறையாக பணம் வருவதால் அடுத்தடுத்த தயாரிப்புகளில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இதனால் திரையுலகம் செழிக்கிறது” என்று கூறினார்.