மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் நேற்று இந்தப் படத்தை நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து திரையரங்கில் ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “இங்கே நான் வந்திருப்பது தமிழ் சினிமாவின் ரசிகனாக. தயாரிப்பாளராக, இந்த நடிகர்களை பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகனாக, ஒரு சிறந்த படத்தில் இவர்கள் நடித்துள்ளார்கள் என்பதுபோக இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நாம் என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கிறார்கள். பல நடிகர்கள் இந்த இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பியதை இவர்கள் செய்துள்ளனர். ஒரு ரசிகனாக இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட மலைப்பு கண்டிப்பாக எல்லா தமிழ் ரசிகர்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்.
இந்த படத்தின் ஆரம்பத்தில் தமிழகத்தின் பொற்காலத்தைப் பற்றிய ஒரு வசனம் வரும்.. அது என் குரலில் வரும். அதை மீண்டும் ஒரு முறை சொல்ல ஆசைப்படுகிறேன்.. தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்ட ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ஒரு சினிமா தயாரிப்பாளராக கலைஞராக எனக்கு அது பெருமிதம்.
ஆரோக்கியமான ஒரு போட்டியும், பொறாமையும் இருக்க வேண்டியதுதான். ஆனால், மற்றவர்கள் வீழ்ச்சியை பார்த்து மகிழ்வதில் எந்த சந்தோஷமும் கிடையாது. ஏனென்றால் இந்த படகில் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம் என்பதுதான் உண்மை. இதில் ஓட்டை விழுந்தால் நானும் சேர்ந்து முழுகுவேன் என்பதுதான் உண்மை.
தமிழ் சினிமாவிற்கு 100 வயது. எனக்கு 67. இந்த நல்ல தருணத்தில் இவர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது ராஜ்கமல் பிலிம்ஸின் படமாக இருந்தால்தான் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று இல்லை. இது எங்கள் தமிழ் படம். இவர்களுடன் சேர்ந்து படம் பார்த்ததில் எனக்கு சந்தோஷம்.
இது வெற்றிப் படம். லைக்கா ப்ரொடக்ஷனையும், மணிரத்தினத்தையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது. இதில் நிறைய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளார்கள். நான் மலையாள படத்தில் ஆரம்பிக்கும்போது மொத்தமாகவே 12, 13 பேர்தான் இருப்போம். இவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டதை பார்த்தால் மலைப்பாக உள்ளது. இப்படி ஒரு தயாரிப்புக்கு துணையாக இருந்த லைக்காவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கார்த்தி நடித்தது நான் நடிப்பதாக இருந்த வேஷம்.. இவருக்கு வந்தது. சிவாஜி சார் அருண்மொழிவர்மன் நான் செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். பல வேஷங்களில் நானே நடிக்க ஆசைப்பட்டேன். இதை அருமையாக நடித்துள்ளார்கள். போர்க்களத்தில் வரும் காட்சிகளை எல்லாம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். இந்த படத்தை நான் தயாரித்தது போல ஒரு சந்தோஷம். ஏனென்றால் தமிழ் சினிமா தயாரித்திருக்கிறது. அது நான் தயாரித்த மாதிரிதான். இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். இந்த கூட்டுணர்வு நீடிக்க வேண்டும்.
நாளைக்கு என் படத்தை நீங்கள் இதுபோல கொண்டாட வேண்டும் என நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியிடம் கேட்டுக் கொண்டார். சுமாராக இருந்தால் ரகசியமாக என்னிடம் சொல்லி விடுங்கள்..” என கமலஹாசன் சொன்னதும் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
மேலும், “ஒரு புத்தகத்தை படமாக்குவது போன்ற கஷ்டம் வேறு கிடையாது. ராமாயணத்தை எப்படி எடுப்பீர்கள்.. எங்கிருந்து தொடங்குவீர்கள். இந்த படத்தைப் பொறுத்தவரை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்கள். என்னைப் போன்ற புத்தகம் படித்தவர்களுக்கு இன்னும் நான்கு காட்சிகள் சேர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும்.
இதை விமர்சனமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் காட்ஃபாதர் புத்தகத்தை அப்படியே எடுக்க முடியாது. கதையில் எது தேவையோ அதை எடுத்துக் கொண்டு படம் எடுத்து உள்ளார்கள். தெரிந்த பாடலை எங்களோடு சேர்ந்து பாடுங்கள், இடையில் இரண்டு வரிகள் சரணம், பல்லவி விட்டால் கோவித்துக் கொள்ளாதீர்கள் என்றுதான் சொல்ல முடியும். தவறுகள் கண்டுபிடித்தால் எல்லாவற்றிலும் தவறுகள் கண்டுபிடிக்கலாம். காந்திக்கு பல்லு இல்லை என சொல்வது முக்கியமில்லை.
கல்கி எழுதியதிலேயே நிறைய வரலாற்று உண்மைகள் இருக்க முடியாது. மறைமலை அடிகளார் எழுதிய அம்பிகாபதி, அமராவதி கதாபாத்திரங்கள் இருந்ததற்கான சான்றுகளே இல்லை. இது சரித்திர புனைவுதானே தவிர சரித்திர புத்தகம் அல்ல.
பாலச்சந்தர் ஆந்திராவில் போய் படம் எடுத்த பொழுது ஆந்திர மக்கள் அதை கொண்டாடினர். மொழி அரசியலை சினிமா துறையில் பண்ணாமல் இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. நாம் சங்கரா புராணத்தை கொண்டாடியதுபோல ஆந்திராவில் சமமாக கொண்டாடினார்கள்.
கர்நாடகாவில் ஒரு முறை நான் பேசும்போது உங்கள் நாகேஷ் என்று சொல்லக் கூடாது, எங்கள் நாகேஷ் என்றுதான் சொல்ல வேண்டும் என கூறினேன். எனக்கு தெலுங்கு படம் பிடிக்கும். தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் யாரும் எனக்கு அட்வான்ஸ் கொடுக்கவில்லை. ஆனாலும் எனக்கு தெலுங்கு படம் பிடிக்கும். ஆரோக்கியமான போட்டி நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதை நிகழ்த்தி காட்டுவதற்கான திறமைகள் தமிழ் சினிமாவில் இருப்பதற்கான சான்றுதான் இந்த பொன்னியின் செல்வன் படம்..” என்றார் கமல்ஹாசன்.
“பொன்னியின் செல்வன் படம் விக்ரம் பட வசூலை முறியடித்துள்ளது” தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கமலஹாசன், “இதில் எனக்கு சந்தோஷம்தான், அதனால்தான் நான் இங்கே வந்துள்ளேன்.” என்றார்.
“படத்தில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் ஆதித்த கரிகாலனா, வந்தியத்தேவனா, அருள்மொழிவர்மனா?” என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “இவர்கள் 3 பேருக்கும் இடையில் சண்டை மூட்டிவிட பார்க்கிறீர்களா?” என கேட்டதும் சிரிப்பலை எழுந்தது. மேலும் தொடர்ந்த கமல், “கல்கிக்கே யாரைப் போற்றுவது என்ற குழப்பம் இருந்தது. இரண்டாவது பாகத்தை பார்த்துவிட்டு சொல்கிறேன். இப்பொழுது சொல்ல முடியாது. படத்தின் இடைவேளையில் படம் எப்படி இருக்கிறது என கேட்டால் என்ன சொல்ல முடியும்? அதுபோலத்தான் இதுவும்..” என்றார்.
தொடர்ந்து “இயக்குநர் வெற்றி மாறன் ராஜராஜ சோழன் இந்து மதம் இல்லை” என்று கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ராஜராஜசோழன் காலத்தில் ‘இந்து மதம்’ என்ற பெயர் கிடையாது. ‘சைவம்’, ‘வைணவம்’, ‘சமணம்’ போன்ற சமயங்கள் இருந்தன. ‘இந்து’ என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ‘ஷண்மத ஸ்தாபனம்’ என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம்.” என்றார்.
நடிகர் விக்ரம் பேசுகையில், “எங்களின் கனவு நிஜமாகியதில் சந்தோஷம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி. அனைத்து தலைமுறையினரும் இந்தப் படத்தை பார்க்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. இந்த மாதிரி இதைப் போன்ற ஒரு படத்தில் நடிப்பது திருப்தியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லருக்கு கமல் சார் வாய்ஸ் கொடுத்தார். இந்தப் படத்தின் தொடக்கத்தில் கமல் சார் கொடுக்கும் descriptionதான் படத்தில் ஜிவ்வுனு ஏறி அப்படியே போகும்…” என்றார்.
நடிகர் கார்த்தி பேசுகையில், “அனைவரும் இந்தப் படத்தை நமது படம்… தமிழ்நாட்டின் படம் என கொண்டாடுகிறார்கள். விடியற்காலை ஐந்து முப்பது மணிக்கு அம்மாவையும், பாட்டியையும் உடன் அழைத்து வந்து படம் பார்க்கிறார்கள் என்றால் இது சந்தோஷமான விஷயம். நாங்கள் எவ்வளவு ஜெயித்தாலும் எங்கள் வெற்றி கமல்ஹாசன் சாரை சேரும். ‘பருத்தி வீரன்’ பட பூஜையின்போது மருதநாயகம் படத்தின் டிரைலர் போட்டு காட்டினார்கள். அந்த ட்ரெய்லரில் குதிரையில் நீங்கள் வருவது என் கண்ணுக்குள் அப்படியே இருக்கிறது…” என்றார்.