1992-ம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம் ‘சின்னப் பசங்க நாங்க’. இந்தப் படத்தில் முரளி, ரேவதி, சாரதா ப்ரீதா மூவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் ராஜ்கபூர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
பெரும் வெற்றியைப் பெற்ற இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு முதலில் ரேவதி ஒத்துக் கொள்ளவில்லையாம். பின்பு கதை, திரைக்கதை, வசனத்தைப் படித்துப் பார்த்த பிறகே நடிக்க ஒத்துக் கொண்டதாகச் சொல்கிறார் இயக்குநர் ராஜ்கபூர்.
இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் இயக்கிய முதல் படமான ‘தாலாட்டு கேட்குதம்மா’ வெளியான பின்பு அடுத்தப் பட வேலைகளில் மூழ்கினேன்.
அந்தப் படம் ‘சின்னப் பசங்க நாங்க’ என்று முடிவாகியிருச்சு. இந்தப் படத்தோட கதையை நாலு வருஷத்துக்கு முன்னாடியே நான் எழுதி வைச்சிருந்தேன். முரளி அப்போ பிளேபாய் மாதிரியிருந்தார். அவரை ‘இதயம்’ படத்துல இருந்தே எனக்கு நல்லா பழக்கம். அதுனால அவரையே நாயகனாக புக் பண்ணிட்டேன்.
ஹீரோயினா நடிக்க ரேவதிகிட்டே கேட்டேன். முதல்ல முடியாதுன்னுட்டாங்க. நான் வசந்த் இயக்கத்துல ஒரு படத்துல நடிக்கப் போறேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் நான் இயக்கிய ‘தாலாட்டு கேட்குதம்மா’ படத்தைப் பார்க்கச் சொன்னேன். அந்தப் படத்தையும் பார்த்திட்டு இதுவும் ஒரு சாதாரண வில்லேஜ் சப்ஜெட்டுதானேன்னு சொல்லிட்டாங்க.
ரேவதியைத் தவிர வேற யாரையும் இந்தக் கேரக்டருக்கு நான் நினைக்கலை. நான் பார்த்துப் பார்த்து ரசிச்ச நடிகை அவங்க. சிவாஜிக்கு அப்புறம் அவங்கதான்னு நான் நினைச்சிருந்தேன். அப்படி எனக்கு ரொம்பவும் புடிச்ச நடிகை அவங்க.
இப்படி முரண்டு பிடிக்கறாங்களேன்னுட்டு இந்தப் படத்தோட திரைக்கதை, வசனத்தை.. அதுலேயும் ரேவதி மட்டுமே பேசக் கூடிய வசனத்தையெல்லாம் மொத்தமா எழுதி ரேவதிகிட்ட கொடுத்தேன். “இதைப் படிச்சுப் பார்த்திட்டு அப்புறமா சொல்லும்மா…” என்றேன்.
இடுப்புல தாலி கயித்தோடவே நாயகனைச் சுத்திக்கிட்டிருக்குற பொண்ணு.. சந்தர்ப்ப சூழ்நிலையில வேறொரு பொண்ணையே நாயகனுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சு.. தியாக மனப்பான்மைல வாழுது என்ற ரேவதியின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றவாறு அந்த வட்டார மொழி வசனங்களுடன் நான் எழுதியிருந்தேன்.
வசனங்களைப் படிக்கப் படிக்க ரேவதி ஒரு மாதிரியாயிருச்சு. உடனேயே போன் பண்ணி “காஸ்ட்யூமரை வரச் சொல்லுங்க”ன்னு சொன்னாங்க. அவ்வளவுதான். அந்த நிமிட சந்தோஷத்துக்கு அளவே இல்லாமல் போச்சு.
ரேவதி போகப் போக அந்தக் கதைல இன்வால்வ்மெண்ட் ஆகி ஒன்றிப் போய் நடிச்சதைப் பார்த்து நானே கதையை மாத்திட்டேன். முதல்ல எழுதியிருந்த கதைப்படி ரேவதிதான் கடைசில செத்துப் போவாங்க. ஆனால், இப்போ புதுசா சாரதா ப்ரீதா சாகுற மாதிரியும் ரேவதி பிழைச்சுக்குற மாதிரியும் மாத்தி எழுதி படத்தை எடுத்திட்டேன்.
படத்தை ‘குட்லக்’ தியேட்டர்ல இளையராஜா பார்த்தார். பார்த்திட்டு வெளில வந்து “இந்தப் படத்துக்கு எப்படிய்யா அமரன் ரீரிக்கார்டிங் செய்வான்..?” என்றார். “ஏறுய்யா கார்ல…” என்று சொல்லி என்னை அவர் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து சாப்பாடு போட்டார். அப்புறமா, “யார்யா அந்த விஸ்வம்?”ன்னு நடிகர் விஸ்வத்தைப் பத்தி விசாரிச்சார். “உனக்குக் கல்யாணமாயிருச்சா?” என்றெல்லாம் என்னிடம் அக்கறையாகக் கேட்டார்.
இந்தப் படத்தின் ரீரிக்கார்டிங்கின்போது கேஆரை வரவழைச்சு அவர் கையால என்னோட மூணாவது படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்தார் இளையராஜா..” என்கிறார் இயக்குநர் ராஜ் பிரபு.