Advertisement

பிரபுதேவா – சிம்ரன் இணையும் ‘கமல் ஸ்ரீதேவி’ படத்தின் படப்பிடிப்பு கிளிம்ப்ஸ் வெளியீடு!

ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’, ‘பாபா’, ‘சிவாஜி’ உள்ளிட்ட படங்களில் கிராபிக் டிசைனராகப் பணியாற்றிய சவுந்தர்யா ரஜினிகாந்த், ‘கோவா’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ மற்றும் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களை இயக்கினார்.

தற்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் பிரபுதேவா, சிம்ரன் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், ஸ்மீகா மணிமேகலை ஆகியோரும் நடிக்கின்றனர்.

எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் ஜியோன் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இதே தயாரிப்பு நிறுவனங்கள் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ திரைப்படத்தையும் தயாரித்துள்ளன. 90-களில் ரசிகர்களின் விருப்பமான ஜோடிகளில் ஒன்றாக இருந்த பிரபுதேவா, சிம்ரன் இருவரும் ஏற்கெனவே ‘வி.ஐ.பி’ மற்றும் ‘டைம்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ள ‘கமல் ஸ்ரீதேவி’ படத்தின் படப்பிடிப்பு குறித்த கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply