தனது திரைப்பயணத்தில் தென்னிந்தியப் படங்கள் அளித்த அனுபவமே மிகச் சிறந்தது என்று நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், பாலிவுட் மற்றும் தென்னிந்திய ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பேசினார்.
“தென்னிந்தியத் திரையுலகில் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். அங்கு எனக்குக் கிடைத்த தனிப்பட்ட அனுபவங்கள் அனைத்தும் சிறப்பானவை.ஒவ்வொருவருக்கும் அவரவர் திரைப்பயணம் இருக்கும். ஆனால், எனது அனுபவத்தின் அடிப்படையில் சொல்வதென்றால், பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமா பல மடங்கு சிறந்தது. பாலிவுட் ரசிகர்கள் என்னைப் பற்றி நினைவுகூரும்போது, ‘ஆமாம், சமீரா ரெட்டி என்று ஒருவர் இருந்தார்’ என்று சொல்லலாம். ஆனால் தென்னிந்திய ரசிகர்கள் இன்றும் என்னை அன்புடன் வரவேற்று, தங்கள் பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இப்போதும் பலர் என்னை ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மேக்னா என்றே அழைக்கிறார்கள். 18 ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து கிடைக்கும் இந்த அன்பு ஈடு இணையற்றது. எனது முதல் படமான ‘மைனே தில் துஜ்கோ தியா’வில், என்னுடைய இயல்பான நிறத்தைவிட இரண்டு முதல் மூன்று நிறங்கள் வரை வெள்ளையாகக் காட்டினார்கள். இதனால் திரையில் எனது தோற்றம் சாம்பல் நிறத்தில் இருந்தது. முகத்திற்கும் உடலுக்கும் ஒரே நிறம் இருக்க வேண்டும் என்பதற்காக உடல் முழுவதும் மேக்கப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இன்றும் எத்தனையோ பெண்கள் தங்கள் குடும்பத்தினரிடமே நிறம் மற்றும் உடல் எடை குறித்த விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள். பெற்றோர்களும் புகுந்த வீட்டினரும் கூட ‘கருப்பாக இருக்கிறாய், குண்டாக இருக்கிறாய்’ என்று கூறுகிறார்கள். இது எவ்வளவு கொடுமையானது! அழகுக்கான அளவுகோலை நிர்ணயிப்பது யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
