Advertisement

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்காக கர்நாடக இசை பயிலும் ராஷ்மிகா!

பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் அவராக நடிக்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இதற்காக கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ளத் தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டியில் இந்தப் படத்தில் நடிப்பது குறித்துப் பேசிய ராஷ்மிகா, “கர்நாடக இசையைப் பயிலப் போகிறேன். எனக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ள முடியாது. உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் என்னிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை வீட்டில்கூட பாடல்களை முணுமுணுத்துப் பாடியதில்லை. இப்போது இந்தப் படத்திற்காகப் பாட வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான திறமை என்னிடம் இல்லை என்றாலும், எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அணுகியபோதே, இது மிகவும் சவாலான வேடம் என்று தெரிவித்தேன். அவரது வாழ்க்கை மிகவும் அழகானது. அடுத்த தலைமுறையினரும் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

எனக்குள் இருக்கும் லட்சியவாதி, இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இப்போது இசை என்ற புதிய உலகத்திற்குள் பயணிக்கப் போகிறேன். இதை நினைத்து மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். இந்த முயற்சி சிறப்பாக அமையுமா அல்லது ஏமாற்றத்தைத் தருமா என்பது தெரியாது. ஆனாலும், என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்றார். ‘எம்எஸ் – எ லெக்கஸி ஆன் ஸ்க்ரீன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை கவுதம் தின்னூரி இயக்குகிறார். அனிருத் இசையமைக்க, அல்லு அரவிந்த், பன்னிவாசு, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply