கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நவம்பர் 20-ம் தேதி திரைக்கு வந்த ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தில் மிஷ்கின் ‘மார்க்கண்டேயன்’ என்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பட விழாவில் பங்கேற்ற அவர், தனது பழைய படங்களின் தொடர்ச்சியை உருவாக்கும் திட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகம் முதல் ஐந்தாம் பாகம் வரையிலான கதைகள் தன்னிடம் தயாராக இருந்ததாகக் குறிப்பிட்ட மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த முயற்சியை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார். அந்தப் படங்களைத் தொடர்ந்து உருவாக்கும் எண்ணம் தற்போது இல்லை என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், ‘ட்ரெயின்’ படத்தில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இரண்டாம் பாகம் எடுப்பதற்கான சாத்தியம் இருப்பதாகவும், அதன் கதையை எப்படித் தொடர்வது என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் தெரிவித்தார். ‘அஞ்சாதே’ படம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்க்கையைப் பதிவு செய்தது என்பதால், இன்றைய தலைமுறை ரசிகர்கள் அதனுடன் எந்த அளவுக்குத் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார். நான் எழுதும் கதை ‘அஞ்சாதே’ படத்தின் அடுத்தகட்டமாக அமைந்தால் மட்டுமே ‘அஞ்சாதே 2’ என்ற பெயரைச் சூட்டுவேன். இல்லையெனில் புதுப் பெயரில்தான் வெளியிடுவேன். படைப்பின் மீதான நேர்மையே தனக்கு முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
