பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் முகேன் ராவ். மலேசியாவைச் சேர்ந்த இவர், ‘வேலன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘மைத்ரீ’, ‘ஜின் – தி பெட்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பிரீத்தி அஸ்ரானியுடன் இணைந்து மருத்துவக் குற்றங்களை மையமாகக் கொண்ட திரில்லர் திரைப்படமான ‘நிறம்’ மற்றும் ‘மைலோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், தயாரிப்பாளர் ஒருவர் மீதான பண மோசடி புகாரில் முகேன் ராவின் பெயரும் இடம்பெற்றதாகத் தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக அதன் தயாரிப்பாளரிடமிருந்து முன்பணம் பெற்றிருந்தேன். அந்தப் படம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்த்து சுமார் 8 முதல் 10 மாதங்கள், அதாவது ஏறக்குறைய ஒரு வருடம் காத்திருந்தேன். இதற்கிடையில், மற்ற இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்புகளையும் தவறவிட்டேன். இறுதியில் அந்தப் படத்தைத் தயாரிப்பாளர் கைவிட முடிவு செய்தார். அதன்பிறகு, நான் பெற்ற முன்பணத்தின் முழுத் தொகையையும் திருப்பித் தர முன்வந்து வழங்கிவிட்டேன். இந்த விவகாரத்தில் எனக்குரிய அனைத்து கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றியிருக்கிறேன்.
இந்தப் பிரச்சினையைத் தொழில்முறை ரீதியாகக் கையாள வேண்டும் என்பதற்காக இதுவரை அமைதியாக இருந்தேன். இனி சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மூலம் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள உள்ளேன். இதுபற்றி பொதுவெளியில் விவாதிக்கவோ அல்லது கூடுதல் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவோ எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
