‘இந்தியன் 2’ படப்பிடிப்பின்போது நேர்ந்த கிரேன் விபத்தில் இருந்து தான் உயிர் தப்பிய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என்றும், தன்னைக் காப்பாற்றியது யார் என்பது இன்றுவரை புரியாத ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், விபத்து நடந்த அன்று 80 வயது மூதாட்டி தோற்றத்திற்கான ஒப்பனையுடன் படப்பிடிப்பில் இருந்ததாகக் கூறியுள்ளார். வழக்கமாக அமரும் மானிட்டர் அருகே இருந்தபோது திடீரென கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் ஓடத் தொடங்கியதால், காஜலும் ஓடியபோது மேசையில் மோதி கீழே விழுந்துள்ளார். பின்னர் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் திரும்பியபோதுதான், ராட்சத கிரேன் தன்னை நோக்கி விழுவதைக் கண்டதாக நினைவுகூர்ந்துள்ளார்.
அந்த நொடியில் யாரோ தன்னைப் பிடித்து அங்கிருந்து இழுத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், விபத்துக்குப் பிறகு படக்குழுவினரிடம் விசாரித்தபோது யாரும் தன்னைத் தொடக்கூட இல்லை என்பது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார். உயிர் பிழைத்ததே அதிசயம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த அனுபவத்துக்குப் பிறகு கிருஷ்ணர் மீதான பக்தியும் ஆன்மீக ஈடுபாடும் அதிகரித்ததாகக் கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்போது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
