தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ். மாறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் கவனம் பெற்றுள்ள அவர், அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகளும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ் இடம்பெற்றிருப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அவர் நடிக்கும் படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், “நான் நடித்த ‘கே.ஜி.எப்.’ படத்திலும் எனது நடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். என்னை ஏன் படத்தில் நடிக்க வைத்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அந்தப் படம் மிகப்பெரிய வசூலைப் பெற்றது.
என்னைத் தடை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால், ‘திரிஷ்யம் 3’ படமும் நல்ல வசூலைப் பெற்றது. திரைப்படங்களை யாரால் தடுக்க முடியும்? அதிகபட்சமாக நான் தயாரிக்கும் படங்களை வேண்டுமானால் அவர்களால் தடுக்க முடியும். நான் முதன்மையாக ஒரு நடிகர்” என்றார். ‘வாரணாசி’ படம் குறித்துப் பேசிய அவர், “இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்ததற்காக இயக்குநர் ராஜமவுலியிடம் எக்ஸ் தளத்தில் சிலர் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒரு திரைப்படத்தை யாரால் தடை செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
