பொங்கலுக்கு வெளியாகும் இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’!

பா. ரஞ்சித் இயக்கி தயாரித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் ஆர்யா, தினேஷ், ஷபீர், ஷோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘வேர்ல்டு ஆப் வேட்டுவம்’ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

அப்போகலிப்டிக் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை, வெவ்வேறு குழுக்களுக்கு இடையே நடைபெறும் அதிகாரப் போட்டிகள் மற்றும் மோதல்களைச் சுற்றி நகர்கிறது. எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள், அடிமுறை மற்றும் மல்லகம்பம் போன்ற பாரம்பரியத் தற்காப்புக் கலைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காகப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் உரிய பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் எனப் படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையே ‘தர்மன்’, ‘சேயோன்’ உள்ளிட்ட படங்களும் பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவற்றின் வெளியீட்டுத் தேதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், 2027 பொங்கல் வெளியீட்டை முதலில் உறுதி செய்துள்ள ‘வேட்டுவம்’, பண்டிகை காலத் திரையரங்கப் போட்டியில் இணைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply