சூர்யா நடிப்பில் வெளியான ‘நந்தா’, சூர்யா – திரிஷா இணைந்து நடித்த ‘மௌனம் பேசியதே’ ஆகிய படங்களைத் தயாரித்த அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு, தற்போது புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறார். அமெரிக்காவில் வசித்து வரும் இவர், இயக்குநர் பாலாவின் ‘நந்தா’ படத்தின் மூலம் தயாரிப்புப் பணியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, ‘மௌனம் பேசியதே’ படத்தையும் தயாரித்திருந்தார்.
தற்போது இயக்குநர் இராம்.நா இயக்கத்தில், மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் புதிய படத்தை உருவாக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. அடுத்தகட்டமாக, நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
படத்தின் முதல் காட்சியை இயக்குநர் பாலா இயக்கித் தொடங்கி வைத்தார். சேரன் கிளாப் அடிக்க, சசிகுமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கினார்; பாலா ஆக்ஷன் சொல்லிக் காட்சியைப் படமாக்கினார். இந்த நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கணேஷ் ரகு தயாரித்த ‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’ படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆனால், தற்போது உருவாகும் புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
