‘கோலி சோடா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’. இதில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டி.எஸ்., பிரசன்னா பாலச்சந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் ராப் பாடகர் பால் டப்பா நடிகராக அறிமுகமாகிறார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை விஜய் மில்டன் தனது ரப் நோட் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்குகிறார். தெலுங்கு நடிகர் ராஜ் தருணும் இப்படத்தில் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ வெளியாகியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
