ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் வெக்கை திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளார். மலையாள நடிகர் ஸ்ரீநாத் பசி வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் சாய் தீனா, சுனில், மைம் கோபி, லிங்கேஷ், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். சாலைகளில் நிகழும் போக்குவரத்து விதிமீறல்கள், கவனக்குறைவான வாகன ஓட்டம் மற்றும் சிறிய விபத்துகளால் உருவாகும் மோதல்கள் எவ்வாறு பெரும் விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன என்பதையே மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அகிரன் மோசஸ் இயக்கியுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் அகிரன் மோசஸ் பேசுகையில், இந்தக் கதைக்கு தனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவமே தூண்டுதலாக அமைந்ததாக தெரிவித்தார். ஒரு நாள் தனது காதலியை பார்க்க காரில் சென்றபோது, பின்னால் வந்த ஒருவர் தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டே வந்ததாகவும், குறுகலான சாலை என்பதால் வழிவிட முடியாத சூழலில், அவர் தன்னை முந்திச் சென்று திட்டியதாகவும் கூறினார். அதற்கு பதிலளித்தபோது ஏற்பட்ட மோதலில் அந்த நபரை தாக்கியதாகவும், பின்னர் அவர் ஒரு முக்கிய விஐபியின் மகன் என்பது தெரியவந்ததாகவும் தெரிவித்தார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சந்தித்த பிரச்சினைகளையும், சில கற்பனைகளையும் இணைத்து வெக்கை திரைப்படத்தின் கதையை உருவாக்கியதாக அவர் கூறினார்.
மேலும், சாலைகளில் தினமும் நடைபெறும் சிறிய தகராறுகள் ஏன் இவ்வளவு விரைவாக வன்முறையாக மாறுகின்றன என்பது குறித்து ஆராய்ந்ததாகவும், யாரும் சண்டையிட வேண்டும் என்ற நோக்கத்துடன் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்றாலும், மன அழுத்தம், அவசரம் மற்றும் மனித மனநிலையின் பல்வேறு அம்சங்கள் இதற்கு காரணமாக இருப்பதை உணர்ந்ததாகவும் இயக்குநர் குறிப்பிட்டார். காவல்துறை பதிவுகளில் இடம்பெற்ற பல உண்மைச் சம்பவங்கள் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும், அவற்றின் தாக்கமே இப்படத்தின் கதைக்களமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
—
