‘பேட்ரியட்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

மம்மூட்டி நடித்துள்ள ‘பேட்ரியட்’ திரைப்படத்தில், டேனியல் ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் அவர் அரசாங்க பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரியாகவும், அமைச்சர் நளினிக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் செயல்படுகிறார். நளினி கதாபாத்திரத்தில் ரேவதி நடித்துள்ளார். அதே சமயம் அமைச்சர் சுந்தரம் என்ற பாத்திரத்தில் ராஜீவ் மேனன் நடித்துள்ளார். அவரது மகன் சக்தியாக ஃபஹத் பாசில் நடித்துள்ளார். சக்தி ஏதோ சதித்திட்டத்தில் ஈடுபட்டிருப்பதை அறியும் நளினி, அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர டேனியலை பொறுப்பேற்கச் செய்கிறார்.

அதிகார அமைப்பின் அழுத்தத்தை தாங்க முடியாமல், டேனியல் இந்தியாவை விட்டு லண்டன் நகரத்திற்கு தப்பிச் செல்கிறார். அங்கிருந்து அவர் யூடியூப் தளத்தின் மூலம் சக்தியின் சதித்திட்டங்களை தொடர்ந்து வீடியோக்களாக வெளியிடுகிறார். இதற்கிடையில், பள்ளி மாணவி ஒருவரின் தனிப்பட்ட புகைப்படம் வெளியான சம்பவம் மற்றும் ஜோதி என்ற பெண் காணாமல் போன வழக்கு ஆகிய இரண்டு சம்பவங்களும் டேனியலிடம் வருகிறது. இந்த இரண்டிற்கும் பின்னால் ஒரே நபர் — சக்தி சுந்தரம் — இருப்பது தெரியவருகிறது. இந்த மர்மத்தை கண்டறிய டேனியல் எதிர்கொள்ளும் ஆபத்துகளும், அவருக்கு துணை நிற்பவர்களும் யார் என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்த பரபரப்பான உளவு ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தை இயக்குனர் மகேஷ் நாராயணன் உருவாக்கியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சி சாதாரண மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை கச்சிதமாக எடுத்துரைத்துள்ளார். பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. டேனியலாக மம்மூட்டி மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நண்பனுக்காக கவலைப்படுவது முதல் ஆக்ஷன் காட்சிகள் வரை அவர் சிறப்பாக நடித்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரங்களில் ஃபஹத் பாசிலும் ராஜீவ் மேனனும் நடித்துள்ளனர். குஞ்சாக்கோ போபன் க்ரே ஷேட் கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும், அவரது பாத்திரம் அதிக வலிமை பெறவில்லை என்பது குறையாகும். ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் படத்தை சர்வதேச தரத்தில் பதிவு செய்துள்ளார். சுஷின் ஷ்யாம் பின்னணி இசை படத்தின் பரபரப்பை மேலும் உயர்த்துகிறது.

படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி, குறிப்பாக கடைசி நாற்பது நிமிடங்கள், சற்று மெதுவாகவும் சுவாரஸ்யம் குறைவாகவும் அமைந்துள்ளது. சில கதாபாத்திரங்களின் முடிவுகள் தெளிவாக இல்லாததால் சில கேள்விகள் எழுகின்றன. மொத்தத்தில், முதல் பாதியின் விறுவிறுப்பே இரண்டாம் பாதியிலும் தொடர்ந்திருந்தால், ‘பேட்ரியட்’ திரைப்படம் இன்னும் சிறந்த அனுபவமாக இருந்திருக்கும்.

Add a Comment

Leave a Reply