இயக்குநர் வி. கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல், நடிகை சங்கீதா மற்றும் நடிகர் பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் “வடம்” ஆகும். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக இமான் பணியாற்றுகிறார். படத்தின் தொடக்கப்பிடிப்பு கோவையில் உள்ள மாசாணி அம்மன் கோயிலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த திரைப்படத்தின் முதல் பாடலான “பாண்டி முனி” பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக, படக்குழுவினர் மதுரையில் உள்ள பாண்டி முனி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி, பாடல் வெளியீட்டை ஆன்மிக ரீதியாக தொடங்கினர்.
“வடம்” என்பது ஜல்லிக்கட்டின் ஒரு தனித்துவமான வடிவமாகும். இது பெரும்பாலும் வட தமிழக மாவட்டங்களில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டாகும். இதில் காளையை சுமார் 50 அடி நீளமுள்ள கயிற்றால் கட்டிப்பிடித்து, குறிப்பிட்ட ஒரு சுற்றளவிற்குள் அதை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். சாதாரண ஜல்லிக்கட்டுடன் ஒப்பிடும்போது, இது பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஒரு முறை எனக் கருதப்படுகிறது.
இந்த விளையாட்டின் விதிப்படி, காளையின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பரிசு குறியீட்டை 30 நிமிடங்களுக்குள் 7 முதல் 9 பேர் கொண்ட குழுவினர் அவிழ்க்க வேண்டும். இந்த முறை வட தமிழகத்தில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. இப்படத்தில் காளையை அடக்கும் வீரராக விமல் நடித்துள்ளார். கிராமத்து பின்னணியுடன் கூடிய அதிரடி அம்சங்களைக் கொண்ட திரைப்படமாக “வடம்” உருவாகியுள்ளது.
