காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் மேற்கொண்ட மிரட்சி தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளையான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியா இன்று பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியிலுள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது, எல்லை பகுதியில் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வரவேற்று, ராணுவத்திற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர். இத்துடன் பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த பதிலடி நடவடிக்கையை ஆதரித்து பாராட்டியுள்ளனர்.இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் இந்த நடவடிக்கையை பாராட்டி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “போராளியின் சண்டை தொடங்கியது. இலக்கை அடையும் வரை இது நிறுத்தப்படப் போவதில்லை. முழு நாடும் உங்களுடன் நிற்கிறது” என்ற வாசகத்துடன் ஒரு பதிவு செய்துள்ளார்.