இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.படக்குழு தற்போது படத்தின் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

வரும் மே மாதம் முதல் வாரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. மே 16ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பாரா என்று எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்தப் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்தின் மீது ரஜினிகாந்த் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முந்தைய லால் சலாம் படத்திற்கு சிறப்பான ப்ரமோஷன்களைக் கொடுக்கத் தவறியது குறித்து ரஜினிகாந்துக்கு வருத்ததில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல, தற்போதைய வேட்டையன் படத்திலும் சில அதிருப்திகள் ரஜினிக்கு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இயக்குநர் ஷங்கர் இந்த நிகழ்வில் ராம்சரண் மற்றும் சிரஞ்சீவியை கலந்துகொள்ளச் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
