உலகளவில் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். அவரது ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘இன்செப்ஷன்’, ‘டெனட்’, ‘தி டார்க் நைட்’ மூன்று பாகங்கள் மற்றும் ‘தி பிரஸ்டீஜ்’ போன்ற திரைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் கவனம் பெற்றன.

அவர் இயக்கிய சமீபத்திய திரைப்படம் ‘ஓப்பன் ஹெய்மர்’. இது, அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன் ஹெய்மரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தியேட்டர்களில் ஆரம்பத்தில் மெதுவாக ஓடிய இப்படம், பின்னர் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்று ஆஸ்கர் விருதுகளைப் பல வென்றது.
இந்த நிலையில், கிறிஸ்டோபர் நோலன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘தி ஒடிஸி’, 2026ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேட் டாமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில், ஐமேக்ஸ் திரைகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் இப்போதே விற்று முடிந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை எந்த திரைப்படத்திற்கும் ஒரு வருடத்திற்கு முன்பாக இப்படியொரு டிக்கெட் முன்பதிவு நடக்காத நிலையில், இது புதிய வரலாற்று சாதனை என கூறப்படுகிறது.