இசை மொழி எது பெரிது என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இது பொதுப் பிரச்சனையல்ல என்றும், இளையராஜா மற்றும் வைரமுத்து இடையே நடக்கும் தனிப்பட்ட பிரச்சனை மட்டுமே என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில், இசை மட்டுமே முக்கியமல்ல, பாடல் வரிகளும் முக்கியம் என்று மறைமுகமாக இளையராஜாவை விமர்சித்தார். அதற்குப் பதிலாக கங்கை அமரன் வைரமுத்துவைக் கடுமையாக தாக்கிப் பேசியது மிகவும் தவறு என்று ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடலை எழுத வைரமுத்துவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அவர் ஒரு பாடலாசிரியராக வளர்ச்சி அடைந்திருக்க முடியாது என்றும், அவரை வளர்த்தெடுத்தது தாங்கள் தான் என்று கூறுவது மிகவும் தவறானது என்றும் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
கங்கை அமரன் சொல்வதுபடி பார்த்தால் பஞ்சு அருணாச்சலம் அன்னக்கிளி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை இளையராஜாவுக்கு கொடுக்கவில்லை என்றால் அவர் ஒரு இசையமைப்பாளராக வளர்ச்சி அடைந்திருக்க முடியுமா என்றும் திறமையானவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களது திறமை அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், மொழியும் இசையும் கலந்ததுதான் பாடல், நாம் அனைத்தையும் ரசிக்க வேண்டும் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.