Friday, April 12, 2024

“பஸ் கண்டக்டர் வேலையை ஏன் கைவிட்டார் ரஜினி..?” – கர்நாடக முன்னாள் அமைச்சர் சொல்லும் ரகசியம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பு முனையாக இருந்தது அவரது மேடை நாடக ஆர்வம்தான் என்கிறார் ரஜினி நடத்துனராகப் பணியாற்றிய பெங்களூர் சிட்டி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளரான ஜெ.அலெக்ஸாண்டர்.

கேரளாவில் பிறந்து ஐ.ஏ.எஸ். படித்து முடித்து கர்நாடகா கேடரில் பணியாற்றிய அலெக்ஸாண்டர், பிற்காலத்தில் கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகவும் பணியாற்றியவர்.

இவர் பெங்களூர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பொது மேலாளராகப் பணியாற்றியபோதுதான் நமது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அதே நிறுவனத்தின் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி வந்தார்.

அப்போது நடந்த சம்பவங்களைப் பற்றி சமீபத்தில் ஜெ.அலெக்ஸாண்டர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர் ரஜினி பற்றிப் பேசும்போது, “நான் அந்த நிறுவனத்தின் பொறுப்புக்கு வந்த பின்பு ஒரு நாள் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து ஒரு நடத்துனரின் சஸ்பெண்ட் ஆர்டரை கேன்ஸல் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நான் அவர்களிடத்தில் “சஸ்பெண்ட் ஆன அந்த நபரை வந்து என்னை பார்க்கச் சொல்லுங்கள்…” என்றேன்.

மறுநாள் சஸ்பெண்ட்டில் இருந்த அந்த நபரும் என்னைப் பார்க்க வந்தார். அவர்தான் ‘சிவாஜிராவ் கெய்க்வாட்’ என்ற இன்றைய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்.

அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணத்தை நான் கேட்டபோது ரஜினி மீது எந்தத் தவறும் இல்லையென்றே எனக்குப் பட்டது. அதனால் அந்த சஸ்பென்ஷனை நான் கேன்ஸல் செய்து மீண்டும் அவரை பணியில் சேர்த்தேன். அப்போது மிகவும் மரியாதையுடன் எனக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார் சிவாஜிராவ்.

அதன் பிறகு அந்தக் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் தொழிலாளர்களால் நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் சிவாஜிராவும் நடித்திருந்தார். நாடகமும் அருமை. அவருடைய நடிப்பும் நன்றாக இருந்தது. அதனால் சிவாஜிராவை அழைத்து நான் வெகுவாகப் பாரட்டினேன்.

சில நாட்கள் கழித்து திடீரென்று சிவாஜிராவ் என்னிடம் வந்து, “நான் இந்த வேலைல இருந்து நின்னுக்குறேன் ஸார். என்னுடைய லட்சியமே சினிமால நடிக்கிறதுதான் ஸார். அதனால் மெட்ராஸுக்கு போயி பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் சேரப் போகிறேன்..” என்று சொன்னார். எனக்கு பெரிய அதிர்ச்சியானது.

எனக்கு இது ஏற்புடையதாக இல்லை. அதனால் “வேண்டாம்ப்பா. நீ ரொம்ப ரிஸ்க் எடுக்குற. வேண்ணா நான் உனக்கு சம்பளத்தைக் கூட்டித் தரச் சொல்றேன். கொஞ்ச நாள்ல பிரமோஷனும் கிடைக்கும். இங்கயே இருந்திரலாமே…?” என்று அட்வைஸ் செய்தேன். ஆனால் ரஜினி கேட்கவில்லை. பிடிவாதமாக வேலையை ராஜினாமா செய்வதில் குறியாக இருந்தார். நானும் வேறுவழியில்லாமல் அவரது ராஜினாமாவை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தேன்.

அவருடைய உறுதியான நிலைப்பாடு. தன்னை நம்பிய விதம்.. தன்னால் முடியும் என்று அவர் நினைத்தது எல்லாமுமாக சேர்ந்துதான் இன்றைக்கு அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியிருக்கிறது..” என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெ.அலெக்ஸாண்டர்.

- Advertisement -

Read more

Local News