Friday, April 12, 2024

விஷால் ஸ்டிரைக் அறிவித்தது சட்ட விரோதமானது – போட்டி ஆணையம் தீர்ப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடும் தொழில் நுட்பப் பணிகளைச் செய்து வரும் கியூப் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று கோரி 2018, மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் படங்களை வெளியிடப் போவதில்லை என்று தென் மாநிலங்களை சேர்ந்த அனைத்து திரைப்பட அமைப்புகளும் முடிவு செய்து அறிவித்தன.

இரண்டு முறை டிஜிட்டல் நிறுவனங்களுடன் தென்னக சினிமா அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த முடிவை அவர்கள் எடுத்தனர்.

ஆனால் மறுநாளே மார்ச் 2-ம் தேதியன்று மலையாளத் திரையுலகமும், கன்னடத் திரையுலகமும் இந்த ஸ்டிரைக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து ஒதுங்கிவிட்டன.

இதற்கடுத்து மீண்டும் டிஜிட்டல் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையினால் தெலுங்கு திரையுலகத்தினர் மார்ச் 8-ம் தேதியன்று ஸ்டிரைக்கில் இருந்து விலகிக் கொண்டனர். ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் தியேட்டர்களில் படங்கள் வெளியாகத் தொடங்கின.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விஷால் தலைவராக இருந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் “இந்த ஸ்டிரைக் தொடர்ந்து நடக்கும்” என்று அறிவித்தது.

தயாரிப்பாளர்கள் இனிமேல் வி.பி.எஃப். கட்டணத்தைக் கட்ட மாட்டோம். டிஜிட்டல் நிறுவனங்கள் எங்களிடம் கட்டணம் கேட்கக் கூடாது.

தியேட்டர்களின் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுதல் வேண்டும். படத்தின் பட்ஜெட்டுக்குத் தகுந்தாற்போல் டிக்கெட் கட்டணங்களை வைக்க வேண்டும்.

சினிமா தியேட்டர் கட்டணங்களை ஆன்லைனில் பெறுவதற்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்பனையை உடனடியாக கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும்.

வெளியாகும் படங்களை அவற்றின் பட்ஜெட், தன்மை.. இவற்றிற்கேற்பத்தான் வெளியிட வேண்டும்..” என்று 5 அம்சக் கோரிக்கையை முன் வைத்து விஷால் இந்த ஸ்டிரைக்கை தொடர்ந்து நடத்தினார்.

2018, மார்ச் 16-ம் தேதியன்று சினிமா படப்பிடிப்புகளையும், சினிமா டப்பிங் மற்றும் ரீரெக்கார்டிங் பணிகளும் தமிழ்ச் சினிமாவில் நிறுத்தப்பட்டன.

கடைசியாக ஏப்ரல் 17-ம் தேதியன்று டிஜிட்டல் நிறுவனங்களுடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையில் டிஜிட்டல் நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு டிஜிட்டல் கட்டணத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்ததையடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.

இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று நிறுவனங்களுக்கு இடையேயான போட்டிகள் பற்றி விசாரிக்கும் ஆணையத்திலும் பலரும் மனு கொடுத்திருந்தனர்.

இதையடுத்து இந்த ஸ்டிரைக் பற்றி ஆணையம் தானாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.

இந்த விசாரணையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தெலுங்கு பிலிம் சேம்பர் இரண்டும் எதிர்வாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன் தினம் இந்த வழக்கு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பில், “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தெலுங்கு பிலிம் சேம்பர் ஆகியவையால் அறிவிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்தமானது நிறுவனப் போட்டிகளுக்கான வறைமுறை சட்டப் பிரிவு 3-1 மற்றும் 3-3-களுக்கு எதிரானது. வேலை நிறுத்தம் செய்வதற்கான விதிமுறைகளை இந்த அமைப்புகள் மீறியுள்ளதாகவே இந்த ஆணையம் கருதுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட இரண்டு சங்கத்தினரும் எதிர்காலத்தில் இது போன்ற நிறுவனப் போட்டிகளுக்கான சட்டத்தையோ, விதிமுறைகளையோ மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

இந்த வேலை நிறுத்த அறிவிப்பின்போது சில திரைப்படங்களுக்கு மட்டும் அவற்றின் சிரமம் கருதி வெளியாக அனுமதியளிக்கப்பட்டு அவைகள் வெளியானதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட இரண்டு சங்கங்களுக்கும் எந்தவொரு பண அபராதத்தையும் விதிக்காமல் தவிர்க்கிறோம். எதிர்காலத்தில் இதையே யாரும் தங்களுக்குச் சாதகமானதாக எடு்த்துக் கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கிறோம்.

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையேயான போட்டிகளுக்கான விதிமுறைகளையும், சட்டங்களையும் இந்த இரண்டு சங்கங்களும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய உறுப்பினர்களுக்கும் அவர்கள் அதை தெரியப்படுத்த வேண்டும்..” என்று அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News