‘கொரோனா இரண்டாம் அலையின் பரவல்’ என்று சொல்லி இங்கிலாந்து நாடு கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுமே இங்கிலாந்து உடனான தங்களது கதவுகளை மூடிவிட்டன.
உலகத்தின் மற்றைய தேசங்களும் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் மற்றும் செல்லும் விமானங்கள் என்று அனைத்துவகையான விமானச் சேவைகளையும் நிறுத்திவிட்டன.
இந்த நேரத்தில் அதே லண்டனில் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் ‘துப்பறிவாளன்-2’ படக் குழுவினர் மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றனர்.
படத்தின் கதைப்படி கதைக் களமே லண்டன்தான் என்பதால் அங்கேதான் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். ஏற்கெனவே படத்தின் பாதி காட்சிகளை லண்டனில்தான் ஷூட் செய்துள்ளனர். இப்போதோ முற்றிலும் அடைக்கப்பட்ட நிலை என்பதால் இந்தப் படத்தைத் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் விஷாலின் நிலை பரிதாபமாக இருக்கிறது.
விஷாலின் பரிதாப நிலைமைக்கு இது மட்டுமே காரணம் அல்ல.. அடுத்தப் படமும் தொடர்கிறது.
விஷால்-ஆர்யா நடிக்கும் ‘எனிமி’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த மாதக் கடைசியில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்படவுள்ளது.
இதற்கடுத்து ஜனவரி 10-ம் தேதி அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்காக இந்தக் குழு மலேசியா செல்ல வேண்டியுள்ளது. ஆனால் மலேசியாவில் இப்போது இருக்கும் சட்டத் திட்டங்களின்படி இவர்களால் அங்கே செல்ல முடியுமா என்பதே தெரியவில்லை.
மலேசியா போன்ற அமைப்புடன் இருக்கும் நாடு என்றால் அது சிங்கப்பூர். ஆனால், சிங்கப்பூரில் சட்டத் திட்டங்களை அமல்படுத்துவதில்கூட கடுமை காட்டுவார்கள் என்பதால் இடியாப்பச் சிக்கலாகி நிற்கிறார்கள் படக் குழுவினர்.
இடையில் தாய்லாந்தில் போய் படமாக்கலாமே என்றெண்ணியிருந்தார்கள். ஆனால், தாய்லாந்தில் வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் குவாரண்டைனில் இருந்தாக வேண்டும். அதற்குப் பின்தான் அவர்கள் வெளியில் விடப்படுவார்களாம்.
அழைத்துச் செல்லப்படும் படக் குழுவினர் அனைவருக்கும் அந்த 14 நாட்கள் சம்பளமும், பேட்டாவும் கொடுக்க வேண்டி வரும். இது கூடுதல் செலவாகுமே என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்களாம்.
இது மட்டுமில்லாமல் வெளிநாட்டில் ஷூட் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பல தமிழ்த் திரைப்படங்களும், தற்போது இந்தச் சிக்கலில் சிக்கித் தவித்து வருகின்றன.
இந்தக் கொரோனா என்னும் அரக்கனால் தற்போதைக்கு நேரடியாகப் பாதிக்கப்பட்டிருப்பது திரைப்படத் துறைதான் என்பதில் ஐயமில்லை..!