Friday, April 12, 2024

விசித்திரன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2018-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறு உருவாக்கம்தான் இந்த ‘விசித்திரன்’ திரைப்படம்.

மலையாளப் படத்தை இயக்கிய இயக்குநரான M.பத்மகுமார் இந்தத் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார்.

காவல்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற காவலரான ஜோஸப் என்ற சுரேஷ் தனது குடும்பச் சூழல் காரணமாக சோகத்தில் மூழ்கி எந்நேரமும் குடியும், கையுமாக இருக்கிறார். வேலையில் இருந்தபோது துப்புத் துலக்குவதில் திறமைசாலி என்று பெயர் எடுத்தவர் என்பதால் டிபார்ட்மெண்ட்டில் இப்போதும் அவருக்கு நல்ல பெயருண்டு.

சுரேஷ் திருமணமாகி டைவர்ஸ் ஆனவர். மனைவியான ஸ்டெல்லா இவரைவிட்டுப் பிரிந்து சென்று ஸ்டீபன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவருடைய ஒரே மகளான டயானா மட்டும் சுரேஷூடனே வாழ்ந்து வந்தவர். ஆனாலும், அம்மாவை சென்று பார்த்து வரும் பழக்கமுடையவர்.

இந்த டயனா சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று சாலை விபத்தில் மரணமடைய மனம் உடைந்து போகிறார் சுரேஷ். அன்றிலிருந்து சிகரெட்டும், மதுவுமாகவே இருக்கிறார். இவருடன் பணியாற்றிய காவலர்களான மாரிமுத்துவும், இளவரசுவும் இவருடைய நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் திடீரென்று இவருடைய முன்னாள் மனைவியான ஸ்டெல்லாவும், மகள் இறந்தது போன்ற விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். இவர்கள் இருவரின் மரணமும் ‘மூளைச் சாவு’ என்று சொல்லப்பட்டு இருவரின் உடல் உறுப்புகளும் தானமாக அளிக்கப்படுகின்றன.

ஸ்டெல்லா விபத்துக்குள்ளான இடத்தை பார்க்கும் சுரேஷூக்கு இது விபத்தல்ல என்று தோன்றுகிறது. உடனேயே இந்த விபத்து பற்றி அவர் விசாரிக்க ஆரம்பிக்க… பல விடை கிடைக்காத கேள்விகள் தெரிகின்றன. உடனேயே இது விபத்தல்ல.. கொலை என்பதை அறியும் சுரேஷ் இந்தக் கொலைகாரர்கள் யார்.. எதற்காக தனது முன்னாள் மனைவி மற்றும் மகளை கொலை செய்தார்கள் என்பதை கண்டறிய முனைகிறார்.

இதில் வெற்றியடைந்தாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

உடல் உறுப்பு தானம் என்பது இறந்து போன ஒரு மனிதன், மற்றொரு மனிதனுக்கு உயிர் கொடுத்து வாழ வைக்கும் ஒரு பெருஞ்செயல். இந்த வகையான தானம் பற்றிய விழிப்புணர்வு சமீப ஆண்டுகளில் பரவலாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் காலப்போக்கில் வழக்கம்போல இந்தியாவில் மட்டும் இது வியாபாரத்திற்காக திசை திருப்பப்பட்டு, முறைகேடுகளுடன் நடத்தப்பட்டு வருவதாக ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. அதுபோன்ற ஒரு முறைகேட்டில் நடந்த உடல் உறுப்பு தானம் பற்றிய உண்மைக் கதைதான் இந்தப் படம்.

‘ஜோஸப்’பாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷின் உடல் வாகுக்கும், தோற்றத்திற்கும் ஏற்ற கேரக்டர் இது. இதனால்தான் மலையாளத்தில் ‘ஜோஜூ ஜார்ஜ்’ செய்த படம் என்பதால் முன் வந்து ஆர்வத்துடன் நடித்திருக்கிறார்.

படம் முழுவதும் மென்மையான சோகத்துடன் வளைய வரும் சுரேஷ் விசாரணையின்போதுகூட தனது குணத்தை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே நடந்து கொள்கிறார்.

தனது காதலியை அந்தக் கோலத்தில் பார்த்த அதிர்ச்சியில் மனைவியுடன் பேசாமல் இருந்து மனைவி பிரிவுக்கும் ஒரு காரணமாக அமைந்துவிட்ட குற்றவுணர்ச்சியை தன் முகத்தில் காட்டியிருக்கிறார்.

படத்தின் சில காட்சிகளுக்காக தனது உடல் எடையை ஏற்றிக் குறைத்து மிகவும் பிரயத்தனப்பட்டு நடித்திருக்கிறார் சுரேஷ். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

எந்த எமோஷன்ஸையும் காட்டாமலேயே சோக முகத்துடனேயே வலம் வருவது மலையாளப் படங்களுக்கு ஓகேதான். ஆனால் தமிழில்.. தமிழ் ரசிகர்களுக்கு இந்த ஹீரோ நிச்சயமாக புதியவர்தான்.

இறுதியில் தனது உயிரையே பணயம் வைத்து உண்மையை வெளிக்கொணரும் அந்த சுவையான திரைக்கதைதான் படத்தின் உயிர் நாடி. ஆனால் அதற்கு வாய்ஸ் ஓவரிலேயே பேசி முடித்துக் கதை சொல்லியிருப்பதால், சோகத்தில் பாதியை மட்டுமே ரசிகர்களுக்கு தந்திருக்கிறது.

மனைவி ஸ்டெல்லாவாக பூர்ணா.. பாடல் காட்சிகளில் மாண்டேஜ் ஷாட்களில் அழகாக இருக்கிறார். கணவனுடன் பிணக்கு ஏற்பட்டவுடன் “எவளையாவது வைச்சிருக்கியா.. சொல்லித் தொலை.. நான் விலகிக்கிறேன்” என்று வெறுப்போடு கோபப்படும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார்.

காதலியாக ஒரேயொரு பாடல் காட்சியில் மட்டும் தலையைக் காட்டியிருக்கிறார் மது ஷாலினி. கூடவே தைரியமாக லிப் டூ லிப் கிஸ்ஸையும் கொடுத்துவிட்டு செத்துப் போகிறார்.

மற்றவர்களில் பூர்ணாவின் கணவர் ஸ்டீபனாக நடித்திருக்கும் பக்ஸ்.. தனது மனைவியின் முன்னாள் கணவர் செய்த சேவைக்கான விருதினைப் பெறும் அளவுக்கு உரிமையுள்ளவராக நடித்திருக்கிறார். மேலும் மாரிமுத்து, இளவரசு போன்றோர் கதையை நகர்த்துவதற்காக திரைக்கதையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

காவல் துறையிலேயே வேலை செய்தவர் என்பதால் மிக எளிதாக அனைத்து வகை உதவிகளும் சுரேஷூக்கு கிடைத்திருப்பதால் திரைக்கதை எழுதவும் சிரமப்படவில்லை போலும்.. அனைத்தும் வரிசையாக ஆன்லைனில் வந்து குவிவதுபோல கிடைக்கிறது.

படத்தின் கதை வால்பாறையில் நடப்பதால் அந்தப் பகுதியை அப்படியே கேமிராவில் அழகாகப் பதிவு செய்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் மாண்டேஜ் ஷாட்களால் கேட்கத் தவறவிடப்பட்டுள்ளது. ஆனால் பின்னணி இசையில் கொஞ்சம் அடக்கி வாசித்து சஸ்பென்ஸ், திரில்லர் படம் என்பதை உணர்த்த உதவியிருக்கிறார்.

கலை இயக்குநர் மிகப் பிரயத்தனப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. பாராட்டுக்கள். அதேபோல் படத் தொகுப்பாளரும் படத்தின் முன், பின் காட்சிகளை 99 சதவிகிதம் குழப்பாமல் கொண்டு வந்திருக்கிறார். முன் பாதியில் மட்டுமே ஒரேயொரு காட்சியை சேர்க்காததால் குழப்பமாகிவிட்டது. அதை பின்பாதியில் சரி செய்திருக்கிறார்கள் என்றாலும் எத்தனை பேரால் அதைப் புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

“இந்த இடத்தில் மல்லாக்க விழந்தால் அடிபடுவதுபோல எதுவுமே இவ்லையே..?” என்று சுரேஷ் சொல்லும்போது அந்த இடத்தில் பெரிய சதுர வடிவத்தில் ஒரு கல் இருக்கிறது. ஏன் அந்தக் கல்லில் தலை பட்டிருந்தால் இப்படித்தானே ஆகியிருக்கும்..? கலை இயக்குநர் இந்த இடத்தில் கொஞ்சம் சிந்தித்து அந்தக் கல்லை அப்புறப்படுத்தியிருக்கலாம்.

உடல் உறுப்பு தானத்தில்கூட முறைகேடுகள் நடப்பதும், ஏழைகளுக்கு இங்கேகூட நீதி கிடைப்பதில்லை என்பதும் வெட்கக்கேடான விஷயம். இனிமேல் மூளைச் சாவடைந்து உடல் உறுப்பு தானம் கேட்பவர்களிடத்தில் நிறைய கேள்விகள் கேட்டு உண்மை நிலையை அறிந்த பின்பு இதற்கு சம்மதிக்க வேண்டும் என்கிற செய்தியைத்தான் இந்தப் படம் நமக்கு உணர்த்துகிறது.

RATING : 3 / 5

- Advertisement -

Read more

Local News