நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில், கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘வீரபாண்டியபுரம்’.
நீண்ட இடைவேளைக்கு பிறகு கிராமத்து லுக்கில் தோன்றியுள்ள நடிகர் ஜெய் முதல் முறையாக இப்படத்திற்கு இசையமைத்து, இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார்.
இப்படத்தை லென்டி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி நடித்துள்ளார். மேலும் சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ், இயக்குநர் முக்தார் கான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆர்.வேல்ராஜ், படத் தொகுப்பு – எம்.காசி விஸ்வநாதன், கலை இயக்கம் – பி.சேகர், நடன இயக்கம் – ஷோபி பால்ராஜ். சண்டை இயக்கம் – தினேஷ் காசி.
பாடல்கள் – வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி, இணை இயக்கம் – தமிழ். திருப்பதி ராஜா, டி. இளங்கோ, கலரிஸ்ட் – ரகுநாத் வர்மா, ஒலி வடிவமைப்பு – ராஜா கிருஷ்ணன். டிஐ -B24, விஷுவல் எபெக்ட்ஸ் – பேப்பர் ப்ளேன், பப்ளிசிட்டி டிசைன்ஸ் – தண்டோரா,
புரொடக்சன் மேனேஜர் – பெருமாள், சுகிதன், எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – எஸ்.அஜய் பிரவீன் குமார்.
திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் இருக்கும் பெரிய குடும்பஸ்தர் சரத் லோகிதாஸ். இவருக்கும் பக்கத்து ஊரான நெய்க்காரன்பட்டியின் புள்ளியான ஜெயப்பிரகாஷூக்கும் இடையில் தீராத பகை. பரம்பரை பகை. அடிதடி, வெட்டுக் குத்து என்று இரண்டு பக்கமும் பல கொலைகள் நடந்திருக்கின்றன.
இந்த நேரத்தில் இந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இள வயசு பிள்ளைகளுக்குக் காதல் நோய் ஏற்படுகிறது. சரத்தின் மகளான கதாநாயகி மீனாட்சிக்கும், ஜெயப்பிரகாஷின் மகனான நாயகன் ஜெய்க்கும் இடையில் காதல் பூக்கிறது.
இந்தக் காதல் பற்றிய விஷயம் இரு வீட்டார்களுக்கும் தெரிய வருகிறது. எதிர்பார்த்ததுபோலவே இரு வீட்டு பெற்றோர்களும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர்.
ஆனால் தாலி கட்டும் நேரத்தில் மனம் மாறுகிறார் ஜெய். இரண்டு வீட்டு சம்மதத்துடன் அவர்களுடைய ஆசியுடன்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று சொல்லி திருமணத்தை நிறுத்துகிறார்.
மேலும் தனது காதலியையும் அவளுடைய அப்பா சரத்திடமே அழைத்துப் போய் ஒப்படைக்கிறார். இதையடுத்து இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் மீண்டும் மோதல் சூடு பிடிக்கிறது. “இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைதான் என்ன..?”, “ஜெய் காதல் கை கூடியாதா…?”, “கடைசியில் இவர்களது திருமணம் நடந்ததா..?” என்ற கேள்விகளுக்கான பதிலே மீதி படம்.
அமைதியும், அடக்கமும் நிறைந்த கிராமத்து இளைஞராக வலம் வருகிறார் நாயகன் ஜெய். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாகவும் இறங்கி நடித்துள்ளார். காதல் காட்சிகளில்தான் படம் பார்ப்பவர்களுக்கும் மூட் வர மறுக்கிறது. ஜெய் இனியும் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது. ஏதாவது வித்தியாசமாக செய்து தனது இருப்பைக் காட்டினால்தான் உண்டு.
மீனாட்சி கோவிந்தராஜன், அகன்ஷா சிங் இரு கதாநாயகிகளும் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளனர். மீனாட்சியின் நடிப்பைக் காண்பிக்க அவருக்காகவே ஒரேயொரு காட்சியை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதில் தனது திறமையை குறைவில்லாமல் காட்டியிருக்கிறார் மீனாட்சி.
பால சரவணன், ஹரீஷ் உத்தமன், ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட், சரத் லோகிதாஸ் மற்றும் பலர் கிராமத்து கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்துகின்றனர்.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் படம் இறுதிவரையிலும் ஜொலிக்கிறது. பின்னணி இசை வேறு நபர் என்பதால் பாடலுக்கான இசையை கொஞ்சம் பாராட்ட வைத்திருக்கிறார் இயக்குநர் ஜெய்.
‘சிவ சிவ’ எனத் தலைப்பிடப்பட்டிருந்த இந்தப் படம் கடைசி நேரத்தில் ‘வீரபாண்டியபுரம்’ என மாற்றப்பட்டது. ‘சுப்ரமணியபுரம்’ போல ‘வீரபாண்டியபுரம்’ என இருக்கட்டும் என்று விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதால் தலைப்பை மாற்றியதாக சுசீந்திரனே தெரித்திருந்தார்.
அதே போல் ஜெய்யின் கெட்டப்பும் ‘சுப்ரமணியபுரம்’ படத்தை ஞாபப்படுத்துவதை போலே அமைந்துள்ளது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை சிறிதும் பூர்த்தி செய்யவில்லை இந்தப் படம்.
இரு கிராமத்து பகையை பழைய படங்களின் அதே பாணியில் காதல், பழி வாங்குதல், ஆக்ஷன் கலந்து அதீதமான வன்முறை காட்சிளுடன் தெறிக்க விட்டுள்ளார் சுசீந்திரன்.
அடுத்தக் காட்சி என்ன என்று பார்வையாளனே மிக எளிதாக யூகிக்கும் வகையில் திரைக்கதையை எழுதிவிட்டு, இதே திரைக்கதையில் படம் முழுவதும் வன்மம், கொலை, ரத்தம் என்று களமிறங்கி பரபரப்பான காட்சிகளை கொடுத்து நமக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘நான் மகான் அல்ல’, ’அழகர்சாமியின் குதிரை’, ‘ஜீவா’ ‘மாவீரன் கிட்டு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சுசீந்திரன்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளாரா என்று சந்தேகமே வருகிறது. இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான மற்றுமொரு சுமாரான படம் என்றுதான் சொல்ல முடிகிறது.
RATING : 2.5 / 5