“இன்றைய இளைய தலைமுறையினருக்கு சினிமாவில் இருக்கும் சீனியர்களைப் பற்றித் தெரியவில்லை” என்று இயக்குநர் பாண்டியராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று நடைபெற்ற ‘3.6.9.’ பட விழாவில் இயக்குநர் பாண்டியராஜன் பேசும்போது, “இந்தப் படத்தின் தலைப்பு ‘3.6.9.’ என்பது என்னால் மறக்க முடியாத ஒரு நம்பர். காரணம் நான் முதன்முதலில் வாங்கிய காரின் நம்பரும் அதுதான்.
இளமையான ஒரு கூட்டணியில் இணைந்து பாக்யராஜ் சார் பணியாற்றியுள்ளார். இந்த மேடைக்கு அவர் வரும்போது படக் குழுவினர் அனைவருமே அவரை ஒரு பயம் கலந்த மரியாதையுடன் வரவேற்றனர். சாதித்த இயக்குநர்களுக்கு இன்று கொடுக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்.
ஏனென்றால், இன்றைய இளைய தலைமுறைக்கு சாதித்த சீனியர்கள் பற்றி தெரிவதில்லை. தொடர்ந்து வெள்ளி விழா படங்களாக கொடுத்தவர் அவர். வெள்ளி விழா படம் கொடுப்பது என்பது சாதாரண விஷயம் போல இன்று இருப்பவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவருடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்துமே வெள்ளி விழா படங்கள்தான்.
எனக்கு சோர்வு ஏற்படும் சமயங்களில், கதை சரியாக யோசிக்க முடியாத நேரங்களில், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் இயக்குநர் பாக்யராஜின் மாணவன் என்பதை நினைத்துக் கொள்வேன். உடனே உற்சாகம் வந்துவிடும்..” என்றார்.