Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

திட்டம் இரண்டு- சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை முதல் படம் இயக்கும்  இயக்குநர்களிடம் இருக்கும். சிலர் அதை ஆர்வமாகச்  செய்து வியக்க வைப்பார்கள். சிலர் ஆர்வக் கோளாறாகச் செய்து டயர்ட் ஆக்குவார்கள். ஒரு சிலர் இரண்டும் இல்லாமல் மைய நிலையில் நிற்பார்கள். இந்தத் ‘திட்டம் இரண்டு’ படத்திலும் அப்படித்தான் ஒரு மைய நிலையில் நிற்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

ஒரு கனமான கதையை  அடுத்து என்ன..? அடுத்து என்ன..? என்ற எதிர்பார்ப்போடு கொண்டு செல்ல வேண்டும் என்ற நுட்பம் அவருக்கு கை வந்திருக்கிறது. அதற்கு முதல் பாராட்டு. பிரம்மாண்டம் என்பதை கதைதான் தீர்மானிக்க வேண்டும். பிரம்மாண்டத்தை வைத்து கதையை சப்பைக் கட்டு கட்டிவிடக்கூடாது என்பதிலும் இயக்குநர் தெளிவாக இருந்திருக்கிறார். ரைட்.. இனி விமர்சனத்திற்குள் செல்லலாம்..

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு காவல் அதிகாரி. ஒரு இரவுப் பேருந்து பயணத்தில் டிக்கெட் போட்டதில் குழப்பமாக ஒரே பெர்த்தில் இளைஞன் சுபாஷ் செல்வத்தோடு பயணிக்க நேர்கிறது. அந்தப் பயணத்தில் சுபாஷ் செல்வம் மீது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு  காதல் வருகிறது.

இப்படி காதலோடு பயணிக்கும் படத்தில் சடார் என ஒரு திருப்பம். ஐஸ்வர்யா ராஜேஷின் உயிர்த் தோழி ஒருவர் மர்மமான முறையில் இறக்க உடைந்து போகும் ஐஸ்வர்யா ராஜேஷ் அதற்கான விசாரணையை தீவிரப்படுத்துகிறார்.

அவரது தோழி எப்படி இறந்தார்…? முதலில் அவர் இறந்தாரா…? சுபாஷ் செல்வத்துடன் உள்ள காதல் என்னானது..? என்பதுதான் இந்தப் படம்.

காக்கா முட்டை’ படத்தில் இருந்து ‘கனா’வரை எந்தக் கேரக்டராக இருந்தாலும் சிக்ஸர் அடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்திலும் நன்றாகவே நடித்துள்ளார். ஆனால், அவருக்கான கேரக்டர் ஸ்ட்ராங்காக எழுதப்படாததால் அந்தப் போலீஸ் வேடம் அவருக்கு பொருத்தமற்றதாகவே இருக்கிறது.

படத்தின் கதையை சுமக்கும் மிக முக்கிய கேரக்டரில் நடித்துள்ள அனன்யா உள்ளபடியே அசத்தி இருக்கிறார். குறைவான நேரத்தில் வந்தாலும் நிறைவான நடிப்பு. சுபாஷ் செல்வமும் பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் நன்றாக நடித்துள்ளார். மேலும் படத்தில் நடித்துள்ள யாவரும் நடிப்பில் ஏதொரு குறையும் வைக்கவில்லை.

பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பொருந்துவதாகவே இருக்கிறது. ஆக அதுவொரு ஆறுதல். படத்தின் தரத்தை எங்கும் கெடுத்து விடாதபடி ஒளிப்பதிவை கச்சிதமாக கையாண்டிருக்கிறார் கேமராமேன்.

தன் பாலின ஈர்ப்பு என்பதில் அறிவியல் இருந்தாலும்… இதை இப்படி வலுக்கட்டாயமாக ஆதரிக்கலாமா..? என்றொரு கேள்வி எழும் அளவில் இயக்குநர் வலிந்து சில காட்சிகளில் டீடெயிலான வசனங்களை வைத்துள்ளார்.

அன்பால் ஏற்றுக் கொள்ளும் எல்லா உறவும் நல்ல உறவுதான் என்றாலும்.. பதின் பருவ இளைஞர்கள், இளைஞிகள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி போலித்தனமான ஒரு வாழ்க்கையை நோக்கி திரும்பி விடக்கூடாது.

ஆக, சொல்ல வந்த கருத்தில் நியாயம் இருந்தாலும்… சொன்ன விதத்தில் இன்னும் கொஞ்சம் மெச்சூட் தன்மையை கடைப்பிடித்திருக்கலாம்.

திட்டம் இரண்டு – மிக்ஸிங் எக்ஸ்பீரியன்ஸ்

மதிப்பெண் : 3 / 5

- Advertisement -

Read more

Local News