Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

“இதனால்தான் ஜெய்சங்கர் ஒரு ஜென்டில்மேன் ஆர்ட்டிஸ்ட்” – நடிகர் டெல்லி கணேஷ் சொல்கிறார்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் டெல்லி கணேஷ் தான் நடிக்க வந்த புதிதில், நடிகர் ஜெய்சங்கரிடம்
அவருடைய படங்களில் நடிக்க தன்னை சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டபோது நடிகர் ஜெய்சங்கர் “எனக்கே இப்போது படமில்லை..” என்று வெளிப்படையாக சொன்னதாக டெல்லி கணேஷ் தற்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில், “1979-ம் வருடம் நான் ‘ஆடு பாம்பே’ என்ற படத்தில் நடித்தேன். இதில் ஜெய்சங்கர் ஹீரோ. சுமித்ரா ஹீரோயின். படத்தைத் தயாரித்தது கலைஞர் மு.கருணாநிதியின் பூம்புகார் புரொடெக்சன்ஸ் நிறுவனம்.

இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது. ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது நான் ஜெய்சங்கரிடம், “ஸார்.. இந்தப் படத்தில் உங்க கூடவே சேர்ந்து நடிக்கும் பெரிய கதாபாத்திரம் கிடைத்தது. இதுபோல வேறு படங்களில் வாய்ப்பு வந்தால் என்னை தயவு செய்து மறக்காமல் கூப்பிடுங்கள்..” என்றேன்.

இப்படி நான் கேட்டவுடன் ஜெய்சங்கர் சிரித்துக் கொண்டே, “கணேஷ்.. உண்மையைச் சொல்லப் போனால், எனக்கு இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படங்களே இல்லை. தவிர என்னுடைய இந்த சிறிய கண்ணை வைத்துக் கொண்டே நான் இத்தனை வருடங்களாக 100-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டேன்.

உனக்கோ நல்ல கூர்மையான கண்கள்.. நடிப்பும் நல்லாயிருக்கு. அதனால் உனக்குப் படங்கள் அதுவாக வரும். யாருடைய சிபாரிசும் தேவையிருக்காது. அப்படி எனக்கு ஏதாவது படங்கள் வந்தால் கண்டிப்பாக உன்னை நான் சிபாரிசு செய்வேன்..” என்றார்.

ஜெய்சங்கரின் பரந்த மனதுக்கும், எதையும் வெளிப்படையாகப் பேசுவதற்கும் யாரும் ஈடு கிடையாது. அதனால்தான் திரையுலகத்தில் அவரை அனைவரும் ‘ஜென்டில்மேன் ஆர்ட்டிஸ்ட்’ என்று இன்றும் சொல்வார்கள்.

அவர் கூறியதுபோல, அதற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் ரொம்பவும் குறைந்துவிட்டது. பிறகு ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில்தான் நான் அவருடன் இணைந்து நடித்தேன்.

இதுநாள்வரையிலும்  நான் யாரிடமும் நடிக்க வாய்ப்பு கேட்டதே கிடையாது. நான் வாய்ப்பு கேட்ட ஒரே ஆர்ட்டிஸ்ட் நடிகர் ஜெய்சங்கரிடம்தான்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் டெல்லி கணேஷ்.

- Advertisement -

Read more

Local News