தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘பிரின்ஸ்’ திரைப்படம்.
இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ’‘இந்த பிரின்ஸ் படம் மிகவும் சிம்பிளான கதை. ஒரு இந்திய பையன், பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கிறான் என்பதுதான் கதை.
ஆனால், இதில் இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடிக்கான ட்ரீட்மென்ட்தான் படத்தில் புதிய விஷயம். காமெடி என்றால் கவுன்டர் செய்யாமல் சம்பந்தமேயில்லாத வேறொரு பதில் சொல்வது சில்லியான பதில் சொல்வது என புதிய விஷயம் சொல்லியிருக்கிறோம்.
அனுதீப் தெலுங்கில்தான் சிந்திப்பார். அந்தக் காமெடியை தமிழுக்கு மாற்றி கொண்டு வர வேண்டும். இரண்டு தரப்பு மக்களுக்கும் பிடிக்க வேண்டும். இதை ஏன் நாம் பரிசோதித்து பார்க்க கூடாது என நினைத்தோம்.
தமிழிலிருந்து ஒரு ஹீரோ, தெலுங்கிலிருந்து ஒரு இயக்குநர் இது க்ளிக் ஆகிவிட்டால் தென்னிந்திய திரைத்துறையில் மாற்றங்கள் இருக்கும். காரணம் நிறைய நாயகர்கள் ஆப்ஷன்ஸ் இருக்கும். கூட்டணிகள் அமையும். தயாரிப்பாளர்கள் தயாரிக்க ஆர்வத்துடன் முன்வருவார்கள். அதனால்தான் இதை சவாலாக கொண்டு வந்திருக்கிறோம்.
இது அனுதீப்பின் சிக்னேஞ்சர். அவருடைய ஸ்டைல் இது. இந்தப் படத்தை பார்வையாளர்கள் எப்படி எடுத்துக் கொண்டு ரசிக்கப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். கதைக்குள் சின்னச் சின்ன சர்ப்ரைஸ் இருக்கும்.
இந்தப் படத்தில் காட்சிப்படுத்தபட்டுள்ள ஊர் தமிழ்நாட்டில் இல்லை. அது கற்பனையில் தோன்றிய ஊர். அந்த ஊர், மக்கள் குறித்தும் அங்கு நிலவும் காதல் குறித்து ஜாலியாக கொண்டு சேர்க்கும் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம்.
தீபாவளிக்கு பார்வையாளர்கள் திரையரங்குக்கு வந்த ஜாலியாக படம் பார்க்கும் மூட்-ஐதான் உருவாக்கியிருக்கிறோம். சொல்லப் போனால் ஒரே ஒரு சண்டைக் காட்சிதான் இருக்கும்.
எனக்கு இது முதல் பண்டிகைக் கால திரைப்படம் என்பதால் இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல்.. அதாவது கடந்த இருபதாண்டுகளாக தீபாவளி நாளில் திரைப்படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பல கதாநாயகர்களின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். முதன்முறையாக தீபாவளியன்று என் படத்தையே பார்க்கும் சந்தோசம் எனக்கு அமைந்திருக்கிறது. அதனால், இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல்.
‘சர்தார்’ படமும் திரைக்கு வருகிறது. கார்த்தி, பி.எஸ்.மித்ரனுக்கு வாழ்த்துகள். இரண்டு படங்களும் ஹிட் ஆக வேண்டும்..” என்றார்.