Friday, April 12, 2024

“நமது இசை மேதைகளின் மதிப்பு இன்றைய தலைமுறைக்குத் தெரியவில்லை”-இளையராஜாவின் வருத்தம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசைஞானி இளையராஜா கடந்த சில நாட்களாக பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி வருகிறார்.

நேற்று சில பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியின்போது “மறைந்த நமது தமிழ் இசை மேதைகளின் மதிப்பும், மகத்துவமும் தற்போதைய தலைமுறைக்குத் தெரியவில்லை” என்று வருத்தப்பட்டார்.    

அவர் அளித்த பேட்டியில், “இப்போதைய கொரோனா காலக்கட்டத்தில் சினிமா துறை டல்லடித்துவிட்டது. விரைவில் இந்த நிலைமை மாறும் என்று நினைக்கிறேன். இப்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் என் மனதுக்குப் பிடித்த திருவண்ணாமலை மற்றும் என் சொந்த ஊரான தேனிக்கும் சென்று வந்து கொண்டிருந்தேன்.

புதிய படங்கள் வெளியாகாததால் என்னுடைய பழைய பாடல்களைத்தான் மக்கள் வீட்டில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடல்களை அவர்கள் கேட்க விரும்பும் காரணம் அந்தப் பாடல்களில் விஷயம் இருக்கிறது என்பதுதான்.  

வீட்டில் என் பேரப் பிள்ளைகளிடம் பழகிக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு நான் எதுவும் சொல்லித் தரவில்லை. அவர்களிடமிருந்துதான் நான் கற்றுக் கொண்டு வருகிறேன்.

அவர்களுக்கு இசையறிவும், ஆர்வமும் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. எல்லாம் என்னுடைய ரத்த உறவுகள்தானே. அப்படித்தான் இருக்கும். வாய்ப்பு வரும்போது அவர்களை எனது இசையில் பாட வைப்பேன்.

என் இசைப் பணி எப்போதும்போல, தொடர்ந்து கொண்டு இருக்கிறது.  தற்போது நான் 1300 படங்களை கடந்தாலும் இன்னும் புதுமையான விஷயத்தை தேடி போய்க் கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் என்னைத் தேடி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வருகிறார்கள். எனக்குப் பிடித்த கதைகளைத் தேர்வு செய்து இசையமைத்து வருகிறேன்.

ஒரு பாடல் என்பது இன்று பூத்த மலர் போல இருக்க வேண்டும். பூத்த மலர் ஓரிரு நாளில் உதிர்ந்து விடும். ஆனால், பாடல் என்பது எப்போதும் மலராக, இளமையாக இருக்கும். அந்த பாடல்தான் மக்கள் மத்தியில் நிலைக்கும். ஆனால், என் பழைய பாடல்களை இப்போது கேட்டாலும் புதுசாகவே இருக்கும்.

ரீமிக்ஸ் பாடல்களை கேட்கவே முடியவில்லை என்கிறார்கள். பின்பு ஏன் அந்தப் பாடல்களையெல்லாம் கேட்கிறீர்கள்.. அந்த மாதிரியான பாடல்களை எதிர்ப்பது என் வேலையல்ல. ஆனால் அதை நீங்கள்தான் செய்ய வேண்டும். அதனை சட்டப்படி தடுக்க முடியுமா என்றும் எனக்குத் தெரியவில்லை.

நான் சினிமாவில் நடிக்கக் கூடாது என்கிற கொள்கையில் இருக்கிறேன்.  கேமராவில் என் முகத்தை காட்டக் கூடாது. என் இசையில்தான் மக்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தமிழகத்தில் இசை பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக நான் சொல்லி வருகிறேன். கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில்கூட அவர் முன்னிலையிலேயே நான் அதைப் பற்றிப் பேசினேன்.

அவரும் உடனேயே அதற்கு ஆவண செய்து அதற்கான அரசாணையைக்கூட வெளியிட்டார். ஆனால், அதன் பின்பு அதுவும் நடக்கவில்லை. இப்போது யாரிடம் போய் கேட்பது என்று தெரியவில்லை.

வெளிநாட்டில், இசை மேதை பீத்தோவன் வாசித்த பியோனோ போன்ற வாத்திய கருவிகள் மற்றும் அவரது வீடு போன்றவற்றை அப்படியே பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். இங்கு நாம் நம் இசை மேதைகளின் இசைக் கருவிகளை பாதுகாத்து வைத்துள்ளோமா..? தியாகராஜா சுவாமிகளின் தம்புரா எங்கே..? முத்துசாமி தீட்சிதரின் வீணை எங்கே…?

நமக்கு நமது இசையின் மதிப்பும், மகத்துவமும் தெரியவில்லை. நம் பாரம்பரியத்தை நாம்தானஅ பாதுகாக்க வேண்டும். எம்.எஸ்.வி. ராமமூர்த்தி போன்ற இசை மேதைகளுக்கு இங்கு சிலைகூட அமைக்கவில்லை என்பதை பார்க்கும்போது, நம்முடைய இளைய தலைமுறையினரிடம் இருக்கும் உணர்வு அவ்வளவுதான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது….” என்றார் இசைஞானி இளையராஜா.

- Advertisement -

Read more

Local News