Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“யசோதா’ படத்தில் கதைதான் ஹீரோ..” – சொல்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ வரும் நவம்பர்  11-ம் தேதி ஐந்து மொழிகளிலும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

திறமையான இயக்குநர்களான ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த ’யசோதா’ படத்தில் நடித்தது பற்றி நடிகை வரலட்சுமி பேசும்போது, “இந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு. முதலில் இது போன்ற கதையையும் கதாபாத்திரங்களையும் எப்படி எழுதினார்கள் என்றுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி நான் இயக்குநர்களிடமும் கேட்டேன்.

இந்தப் படத்தில் நான் வாடகைத் தாய் மையத்தின் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் வசதியான பணத்தை விரும்பக் கூடிய ஒருத்தி. என்னுடைய உண்மையான குணாதிசியம் வாழ்க்கை முறை, நான் உடுத்தும் உடை என பலவற்றில் இருந்தும் இந்தக் கதாபாத்திரம் முற்றிலும் வேறானது.

என்னுடைய கதாபாத்திரம் மிகவும் அமைதியாக இருக்கும். கதையின் போக்கில்தான் என்னுடைய எதிர்மறைத் தன்மை வெளிப்படும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும்.

என்னுடைய கதாபாத்திரம் சமந்தாவுக்கு இணையாக கதையில் பயணித்துக் கொண்டே இருக்கும். யசோதாவிற்கு யாருடைய உதவியாவது அவளுடைய வாழ்க்கையில் வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போதுதான் என்னுடைய கதாபாத்திரம் உள்ளே வரும்.

படத்தை இயக்கிய இரண்டு இயக்குநர்களும் மிகவும் அமைதியானவர்கள். இவர்களைப் போன்ற அமைதியான இயக்குநர்களை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் அவர்கள் வலுவான ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதும் தெரியும்.

வாடகைத் தாய் முறை என்பது அத்தனை சிக்கலானது கிடையாது. சில நடிகர்கள் அதை முயற்சி செய்ததால் அது மிகப் பெரிய விஷயமாக மாறி விட்டது. வாடகைத் தாய் என்பது படத்தில் ஒரு வரிதான். அதன் நன்மை, தீமை பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இது கற்பனைக் கதை என்று நினைப்பவர்களுக்கு இது போன்ற சில மனிதர்களும் உண்மையில் இருக்கிறார்கள் என்பதை காண்பித்து இருக்கிறோம்.

சமந்தாவை கடந்த பத்து, பன்னிரெண்டு வருடங்களாகவே எனக்குத் தெரியும். செட்டில் ஜாலியாக இருந்தோம். அவர் ஒரு வலுவான பெண்மணி. இந்தக் கதாபாத்திரத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார்.

படத்தில் யசோதா கதாபாத்திரம் மிகவும் வலுவானது. சமந்தா அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். எனக்குப் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களும் பிடிக்கும். ஏனென்றால் கதைதான் படத்தின் ஹீரோ…” என்றார் நடிகை வரலட்சுமி.

- Advertisement -

Read more

Local News