இந்திய சினிமா தனது சாதனை பயணத்தில் நூற்றாண்டைத் தாண்டியுள்ளது. தென்னிந்திய மொழிப் படங்களும் இந்நிலையில் நூறாண்டுகளுக்கும் மேலாக உருவாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளன. அந்த காலத்திலேயே வெளியான பல பழமையான திரைப்படங்களின் ‘படச்சுருள்கள்’ முறையான பாதுகாப்பின்றி அழிந்துவிட்டன. இந்நிலையில், சில படங்களுக்கான தகவல்கள் மட்டும் தான் தற்போதுள்ளன. இன்னும் சில படங்களை அந்தந்த தயாரிப்பாளர்கள் தனிப்பட்ட முறையில் பாதுகாத்து வைத்துள்ளனர்.

இந்தத் தகவல்களை எதிர்காலத்திற்கும் பாதுகாக்கும் நோக்கத்தில், இந்திய அரசால் 1964ஆம் ஆண்டில் ‘இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இது தற்போது மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரத்தில் இயங்கி வருகிறது. அங்கு திரைப்படங்கள் தொடர்பான சுருள்கள், நூல்கள், புகைப்படங்கள் என பல அரிய சினிமா சம்பந்தப்பட்ட பொக்கிஷங்கள் பாதுகாப்புடன் வைக்கப்படுகின்றன.
இந்த தேசிய திரைப்பட பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, புனேவில் இயங்கும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் மற்றும் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் இணைந்து, 1951ஆம் ஆண்டு வெளியான ‘பாதாள பைரவி’ திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் மீட்டெடுத்து பாதுகாத்துள்ளது. இதைப்பற்றி ஒரு செய்திப் படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
பிரபல இயக்குநர் கே.வி. ரெட்டி இயக்கத்தில் என்டி ராமராவ், எஸ்.வி. ரங்காராவ், மாலதி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் 1951ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. தெலுங்கில் மார்ச் 15ஆம் தேதி, தமிழில் மே 17ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கு சினிமாவில் முதல்முறையாக 200 நாட்கள் ஓடிய படமாகும். ஹிந்தி மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக வெளியானது. மேலும், 1952ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற முதல் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்தியப் படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.