தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்த படம் ‘ரெட்ரோ’ கடந்த 1-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், முக்கிய வேடங்களில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

சுமார் ரூ.100 கோடிக்கு மேற்பட்ட வசூலை பெற்றிருக்கும் இத்திரைப்படம், வணிக ரீதியாக சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சூழலில், ‘ரெட்ரோ’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளாராம்.
இது தொடர்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “தலைவர் ரஜினிகாந்த் ‘ரெட்ரோ’ படத்தை பார்த்துவிட்டார். அவருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. அவர், ‘படக்குழுவின் அற்புதமான முயற்சி என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. சூர்யாவின் நடிப்பு மிகச்சிறந்தது. குறிப்பாக, கடைசி 40 நிமிடங்கள் அபாரமாக இருந்தது. நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று கூறினார். அதைக் கேட்ட பிறகு, நான் சொன்னேன் – ‘நான் இப்போது பறப்பது போலவே உணர்கிறேன்.. லவ் யூ தலைவா’” என பதிவிட்டுள்ளார்.