தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி சென்ற வருடமே தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி நடிகர் விஷாலின் தலைமையில் இருந்த சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்த தமிழக அரசு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தன் கைவசம் எடுத்துக் கொண்டது.
அதன் பின்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக பல மாதங்கள் தள்ளிப் போன தேர்தல் ஒரு வழியாக இன்றைக்குத்தான் நடந்து முடிந்திருக்கிறது.
அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலைக் கல்லூரியில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணிவரையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
காலையில் வாக்குப் பதிவு துவங்குவதற்கு முன்பாக ஓட்டுப் பெட்டிகளை சீல் வைப்பது தொடர்பாக சுயேட்சை உறுப்பினர்களின் சில கருத்துக்களைச் சொல்ல.. அதை மற்றவர்கள் எதிர்க்க சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் தாமதமாக வாக்குப் பதிவு துவங்கியது.
அதன் பின்பு காலை 9 மணியளவில் வாக்குப் பதிவு அரங்கத்தின் வெளியிலேயே ஓட்டளிக்க வரும் அங்கத்தினர்களுக்கு கையில் பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாகச் சொல்லி செளந்தர், பிரவீண் காந்த், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் ஆதாரத்துடன் குரல் எழுப்பினார்கள்.
இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. பின்பு அவர்கள் அனைவரும் தேர்தல் அதிகாரியான நீதிபதியிடம் புகார் செய்தனர். ஆனாலும் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த், விஜயகாந்த், தனுஷ், பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் வாக்களிக்க வரவில்லை.
வாக்களிக்கத் தகுதியுள்ள மொத்த உறுப்பினர்களான 1304 பேரில் 1050 பேர் மட்டுமே தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர்.
பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு அதே கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. நாளை இரவுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.