‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மதியம் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசுகையில், ”இந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.
மேக்கப் போட்ட பிறகு முதல் காட்சி கோயில் ஒன்றில் எடுக்கப்பட்டது முதல் அனைத்து அனுபவமும் மனதில் மறையாமல் இருக்கிறது.
அனைவரும் இணைந்து குடும்பம் போல் ஒன்றிணைந்து பணியாற்றுவது என்பது புதிது. நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஒரு குடும்பமாக பணியாற்றியதும் மறக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு மன நிறைவை அளித்திருக்கிறது.
இதைவிட ‘பொன்னியின் செல்வன்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக குழுவாக ஒவ்வொரு இடத்திற்கும் பயணித்த அனுபவமும் புதிது. இது தமிழ் சினிமாவின் படமல்ல. தமிழ்நாட்டின் படம். இது ஒரு முக்கியமான பதிவு. இதை எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சென்று, அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
தற்போது பான் இந்தியா சீசன் என்பதால், இந்த படத்தைப் பற்றி தமிழில் மட்டுமல்லாமல், ஏனைய இந்திய மொழிகள் பேசும் மக்களிடத்திலும் சென்று அறிமுகப்படுத்தினோம்.
ஏனெனில் நம்மிடம் இவ்வளவு அழுத்தமான கதையம்சம் கொண்ட படைப்பு இருக்கிறது. இதனை மற்றவர்களிடத்தில் எடுத்துச் செல்லும்போது தன்னம்பிக்கையும் இருந்தது. அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் இப்படத்தை பற்றிய விமர்சனம் இடம் பெற்றிருந்தது.
இத்தருணத்தில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவில் இருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் இடம்பெற்ற சிறிய, சிறிய விசயங்களைகூட நுட்பமாக விவரித்து பாராட்டி எழுதி இருந்தனர்.
இதையெல்லாம் வாசிக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. இதன் மூலம் மக்களின் ரசனை மேம்பட்டிருக்கிறது என்பதை அறியும்போது உண்மையில் சந்தோஷமாக இருந்தது.
‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசித்து விட்டு, அதனை படமாக திரையரங்குகளில் பார்க்கும்போது மாயாஜாலம் நடத்திய மணி சாருக்கு நன்றி.
லட்சக்கணக்கான வாசகர்களின் மனதில் ஆண்டு கணக்கில் ஊறப் போட்டிருந்த கதாபாத்திரங்களையும், கதையையும் திரையில் கொண்டு வருவது எளிதல்ல. இந்த படைப்பை உருவாக்க வேண்டும் என்று யாரும் மணிரத்னத்தை கட்டாயப்படுத்த முடியாது.
ஆனால் மணி சார்தான், “நான் கூடுதல் சுமையை தூக்குவேன். இதனை தூக்குவதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறேன்” என்று சொல்லி, பொறுப்பை உணர்ந்து எங்களை எல்லாம் ஒருங்கிணைத்து வழி நடத்தி உலகில் உள்ள அனைவரும் கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார். அதற்காக அவருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி…” என்றார்.