அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.
சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு.
ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
இப்போது டி.ராஜேந்தர் அணியில் அவர் மீதும், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மன்னன் மீதுமே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை காஞ்சிபுரம் திருவளளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக உள்ள T.ராஜேந்தர், செயலாளராக உள்ள மன்னன், செயற்குழு உறுப்பினராக உள்ள கே.ராஜன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.
இவர்கள் மூவரும் தற்போது நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், கெளரவச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.
“இது சங்க விதிமுறைகளின்படி விதிமீறல். எனவே, இவர்களது வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என தேர்தல் அதிகாரியிடம் தற்போதைய தேர்தலில் போட்டியிடும் முரளி ராமசாமி தலைமையிலான அணியின் சார்பில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் டி.ராஜேந்தரின் இந்தச் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனராம்.
விநியோகஸ்தர்கள் சங்க விதிப்படி அந்தச் சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்பில் உள்ளவர்கள் வேறொரு சினிமா சங்கத்தின் நிர்வாகத்தில் பங்கெடுக்க முடியாதாம்.
ஆனால் இந்த விதியை தளர்த்த வேண்டி, சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி நம் சங்கத்தின் நி்ர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், வேறொரு சங்கத்திலும் பொறுப்புக்கு வரலாம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றியிருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.
‘பொதுக் குழு அனுமதி கொடுக்காதபோது அந்தத் தீர்மானம் அதுவரையிலும் செல்லாது’ என்றுதான் அர்த்தம். “இந்த நிலைமையில் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது எங்களது சங்க விதிகளின்படி சட்ட விரோதம்…” என்று கொந்தளிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்.
எனவே, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் T.ராஜேந்தர், மன்னன் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முக்கியமான உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
இது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலரிடம் இவர்களும் புகார் கூற உள்ளார்களாம்.