Friday, April 12, 2024

சினிமா வரலாறு-74 – திசை மாறிப் போக இருந்த எம்.ஜி.ஆரை தடுத்து நிறுத்திய நண்பர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வி.என்.ஜானகியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால்  அதற்கு முன்னால்  எம்.ஜி.ஆர்.  ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்த ஜானகியின் மாமா  அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆரிடம் நீட்டினார். அதைப் படித்துப் பார்த்த எம்.ஜி.ஆரின் கண்கள் கோவைப்பழமென சிவந்தது.

பத்தாண்டு காலத்திற்கு எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் ஜானகியின் கார்டியனாக உள்ள அவரது மாமா சொல்லுகின்ற படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், அவர்கள் இருவரும் படங்களில் நடிப்பதற்கு படத் தயாரிப்பாளர்கள் ஜானகியின் மாமாவிடம் மட்டுமே ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், ஜானகி படங்களில் தொடர்ந்து நடிக்க எம்.ஜி.ஆர் எந்த மறுப்பும் சொல்லக் கூடாது என்றும் பல நிபந்தனைகளை அந்த ஒப்பந்தத்தில் விதித்திருந்தார் அவரது மாமா.

திருமணம் செய்து கொள்வது பற்றி ஜானகியிடம் முதல் முறையாகப் பேசியபோதே “திருமணத்திற்குப் பிறகு நடிப்புத் தொழிலில் இருந்து முழுமையாக விலகிவிட வேண்டும்” என்று எம்ஜிஆர் அவரிடம் சொல்லியிருந்தார்.

ஜானகியும், ”திருமணத்திற்குப் பிறகு கூடையில் மண் சுமக்கும்  வேலை செய்தாலும் செய்வேனே தவிர நடிப்புத் தொழிலில் இருக்க மாட்டேன்” என்று எம்.ஜிஆரிடம் உறுதியாக சொல்லியிருந்தார்.

அந்த உடன்படிக்கைக்கும் அந்த ஒப்பந்தத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருந்ததால்தான் அந்த ஒப்பந்தத்தைப் படித்தவுடன் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு ஆத்திரம் ஏற்பட்டது.

இதனிடையே ஆத்திரமாகப் பேச வேண்டாம் என்று ஜானகி அவரிடம் சைகை காட்டியதில் எம்ஜிஆரின் கோபம் இன்னும் அதிகமாகியது.

ஆனால் இந்த போராட்டங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ”ஜானகியோட பணத்துக்கு  நீங்க ஆசைப்படலேன்னா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?” என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்ட ஜானகியின் மாமா “அவளை  உங்க இஷ்டத்துக்கு பயன்படுத்தி அவள் சம்பாதிக்கும் பணத்தை நீங்க அனுபவிக்கலாம்னு நினைச்சா நான் அதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டேன்” என்றார்.

”ஜானகி சம்பாதிக்கும் பணத்தில் நான் வாழ விரும்புவதாக நீங்கள் சந்தேகப்பட்டால் திருமணத்திற்குப் பிறகு ஜானகியை எக்காலத்திலும் நடிக்க வைக்க மாட்டேன் என்று நான் எழுதித் தருகிறேன்… போதுமா?” என்று எம்.ஜி.ஆர் கேட்டதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாத  அவர் சர்வநிதானத்துடன் ஒரு சிகரெட்டை பற்ற  வைத்து புகையை நன்கு இழுத்து வெளியேவிட்டார்.

அதன் பிறகு, ”நோயில் படுத்திருக்கும் உங்க மனைவி, உங்க தாயார், உங்க அண்ணன் குடும்பம் என்று உங்கள் குடும்பம் ரொம்பப் பெரிசு. ஜானகிக்கும் அவரது தாயார், பிள்ளை, நான் என்று இத்தனை பேர் இருக்கிறோம். இவ்வளவு பேரும் வாழ்க்கை நடத்த உங்களது சம்பளம் எப்படிப் போதுமானதாக இருக்கும்? நீங்கள் இன்னும் முழு கதாநாயகனாக ஆகவில்லை. அது மட்டுமில்லாமல்  இன்றுவரையில் ஜானகி வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தில் பாதியைத்தான் நீங்கள் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் குடும்பத்தையும், இவளது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இவள் நடித்தே ஆக வேண்டும். அப்படி இவள் நடித்து வரக் கூடிய வருமானத்தை அவளது குடும்பத்திற்கு பயன்படுத்தத்தான் நான் அனுமதிப்பேன்.  வேறு யாரும் அந்தப் பணத்திற்கு சொந்தம் கொண்டாடுவதையோ அந்தப் பணத்தை அனுபவிப்பதையோ என்னால் அனுமதிக்க முடியாது…” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் அவர்.

தனது மாமாவின் அந்த விஷமத்தனமான பேச்சைக் கேட்டு எம்.ஜி.ஆர். ஆத்திரத்தில் ஏதாவது பேசிவிட்டால்  அது திருமணத்திற்குத்  தடையாக அமைந்து விடுமே  என்று அச்சப்பட்ட ஜானகி  “இப்போதைக்கு சரி என்று சொல்லுங்கள். பிறகு பேசிக் கொள்ளலாம்” என்று எம்.ஜி.ஆருக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார். ஆனால், ஜானகியின் மாமா பேசிய எகத்தாளமான பேச்சினால் காயமடைந்திருந்த எம்.ஜி.ஆரை  ஜானகியின் அந்த பேச்சு இன்னும் ஆத்திரம் அடையச் செய்தது.

“ஒரு பெண் சம்பாதிக்கும் பணத்தில் வாழ விரும்புகின்ற ஒரு கேவலமான பிறவி என்று அவள் முன்னாலேயே என்னை அவளது மாமா குற்றம் சாட்டும்போது அதை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர் சொல்வதற்கெல்லாம் என்னை சம்மதிக்கச் கொள்கிறாள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? என்னைவிட அதிகமாக சம்பளம் வாங்குவதால் அவளது இஷ்டத்திற்கு நான் ஆட வேண்டும் என்று நினைக்கிறாளா?” என்று ஜானகி மீது பெரும் கோபம் கொண்டார் எம்ஜிஆர்.

கல்யாணத்தைப் பற்றி பேசி முடிவெடுத்து திருமணத்திற்கு நாள் குறிக்கலாம் என்று அழைத்துவிட்டு இப்படி ஒரு அடிமை சாசனத்தில் தன்னை கையெழுத்து போடச் கொள்கிறார்கள் என்றால் அவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..?

ஜானகி மீது நான் வைத்திருக்கும் அன்பை விலை பேச இவர்கள் முயற்சிக்கிறார்களா என்றெல்லாம் பலவாறான சிந்தனைகள் எம்.ஜி.ஆரின் மனதிற்குள் ஓடின.

எந்த நிபந்தனையும் விதிக்காமல் என்னை மனிதனாக மதித்து என்னோடு வாழ விரும்புகின்ற ஒரு பெண்  இந்த உலகத்தில் எனக்கு கிடைக்கவே மாட்டாளா  என்று எண்ணியபடியே தான் உட்கார்ந்து கொண்டிருந்த நாற்காலியிலிருந்து எழுந்தார் எம்.ஜி.ஆர்.

“ஜானகிக்கு கணவனாக இருக்க விரும்பித்தான் இங்கே வந்தேனே தவிர, ஒரு அடிமையாக இருக்க விரும்பி நான் இங்கே வரவில்லை. வருகிறேன்…” என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர்  அங்கிருந்து கோபமாக கிளம்பிய போதுதான் நினைத்ததை சாதித்துவிட்ட பெருமிதத்துடன் இன்னொரு சிகரெட்டை எடுத்து நிதானமாகப் பற்ற வைத்தார் ஜானகியின்  கார்டியனான மாமா.

நிலைமை எல்லை மீறிப் போவதைக் கண்டு எம்.ஜி.ஆரை தடுத்து நிறுத்த ஓடோடி வந்த ஜானகி ”அவசரப்படாதீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க. அவர் நீட்டின ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து போட்டாலும் நான் நடிக்கவில்லை என்றால் அவரால் என்ன செய்ய முடியம்? அதனால் தயவு செய்து அவரிடம் சரி என்று சொல்லிவிட்டுப் போங்கள்” என்று எம்.ஜி.ஆரிடம் மன்றாடினார்.

ஆனால் ஜானகியின் மீதும்  எம்.ஜி.ஆர். அளவிட முடியாத அளவிற்கு கோபம் கொண்டிருந்ததால் ஜானகி சொன்ன வார்த்தைகள் அவரை ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக  அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

“அவர் கூப்பிட்ட உடன் வந்தது என் தப்பு. அதனால் எனக்கு இந்த அவமானம் வேண்டும்தான். என் பணத்தையோ, புகழையோ பார்க்காமல் என் உள்ளத்தை மட்டும் மதித்து என்னோடு வாழ்க்கைத் துணைவியாக வாழக் கூடிய ஒரு பெண் எனக்குக் கிடைக்காமலா போய்விடுவாள்“ என்று உரக்கச்  சொல்லியபடியே  அங்கிருந்து படிகளில் இறங்கிய எம்.ஜி.ஆர். அந்த இடத்தை விட்டுக் கிளம்பியபோது மழை தூறத் தொடங்கியிருந்தது.  

ஜானகியின் மாமாவைப்  பார்க்க  எம்.ஜி.ஆர். சென்றபோது அவருடன் அவரது நண்பர் ஒருவரும் சென்றிருந்தார். ஜானகியின் வீட்டிலிருந்து  கிளம்பி வெளியே வந்த  எம்.ஜி.ஆரின் முகத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பார்த்து கலக்கமடைந்த அந்த நண்பர் அடுத்து எம்ஜிஆர் எங்கே சென்று கொண்டிருக்கிறார் என்பதை அறிந்ததும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்.

ஜானகி தங்கியிருந்த வீட்டிலிருந்து புறப்பட்ட எம்.ஜி.ஆர். ‘மருத நாட்டு இளவரசி’ படத்தை எடுத்துக் கொண்டிருந்த அந்த படக் கம்பெனி இருந்த பாதையில் போகாமல் வேறு பாதையில் போவதைப் பார்த்துவிட்டு “நாம்  போக வேண்டிய பாதை அந்தப் பக்கம் இருக்கிறது” என்று எம்ஜிஆருக்கு அவரது நண்பர் சுட்டிக் காட்டியபோது “அது எனக்கும் தெரியும். இஷ்டம் இருந்தால் நீங்கள் என்கூட வாங்க. இல்லையென்றால் நீங்களும் போகலாம்…” என்று சற்று கோபமாக அந்த நண்பரைப் பார்த்து சொன்னார் எம்.ஜி.ஆர்.

அவர் அப்படி சொன்னவுடன் எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கிறார் என்பதை ஓரளவிற்கு புரிந்து கொண்ட அவரது நண்பர் எதுவும் பேசாமல் அவரைப் பின் தொடர்ந்தார்.

“என்னை அடிமையாக வைச்சிருக்கணும்னு ஆசைப்படறாங்க போல இருக்கு. சுருக்கமாகச்  சொல்வதென்றால் சினிமா உலகில் சொல்வாங்களே ‘கூஜா’ என்று! அது மாதிரி நான் இருக்கணும்னு ஆசைப்படறாங்க. இந்த உலகத்தில் நான் கல்யாணம் செய்து கொள்ள வேறு பெண்ணே கிடைக்காதுன்னு முடிவு பண்ணிட்டாங்கபோல இருக்கு” என்றெல்லாம் புலம்பியபடி எம்ஜிஆர் நடந்து செல்ல ”அவங்களுக்கு நாம் நல்ல படம் புகட்டலாம் அண்ணே. நீங்க ஒண்ணும் கவலைப்படாதிங்க” என்று எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் கூறிய அந்த நண்பர் “அதெல்லாம் சரி… இந்த மழையில் இப்போ எங்கே போறீங்க?” என்று கேட்டார்.

“பல மாதங்களாக என்னை வேண்டி வேண்டி அழைக்கிறாளே ஒருத்தி… அவளைத்தான் பார்க்கப் போகிறேன்” என்றார் எம்ஜி.ஆர்.

அவர் சொன்னதில் இருந்து ‘மருத நாட்டு இளவரசி’ படம் ‘காளிதாசி’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட காலத்திலிருந்து எம்.ஜி.ஆரை அடைய  தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கும் பெண்ணைப் பார்க்கத்தான் எம்ஜிஆர் செல்கிறார் என்று அவரது நண்பருக்கு தெளிவாகப் புரிந்தது.

விபரீதமான ஒரு முடிவை எடுத்துள்ள எம்.ஜி.ஆரை  எப்படி தடுப்பது என்று தெரியாமல் தவித்தார் அந்த நண்பர்.

(தொடரும்)  

- Advertisement -

Read more

Local News