Friday, October 22, 2021
Home HOT NEWS தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.

1965-ம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில்தான் நடிகராக இவர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகை ஜெயலலிதாவுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஹீரோவாக நடித்து 1974-ல் வெளிவந்த ‘திக்கற்ற பார்வதி’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த். ‘வெங்கட்ராமன்’ என்கிற இயற் பெயரைக் கொண்டவரான இவர், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் உள்ளிட்டவர்களின் இயக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். ‘மேஜர் சந்திரகாந்த்’ என்னும் வெற்றிகரமான நாடகத்தில் இவருடைய பாத்திரத்தின் பெயர் ‘ஸ்ரீகாந்த்’. பிறகு இதுவே இவரின் சினிமா பெயராக மாறிவிவிட்டது.

திருவல்லிக்கேணியில் வசித்து வந்த ஸ்ரீகாந்தின் அறையில் இருந்தபடி பாலசந்தர் எழுதிய நாடகங்கள் ஏராளம். அதேபோல் கவிஞர் வாலி, நடிகர் நாகேஷ் உடன் நல்ல நட்பில் இருந்தார். இவரை அவர்கள் வெங்கி’ என்றும் “வெங்கு’ என்றும்தான் அழைப்பார்கள்.

ஸ்டைலான தோற்றம், அலட்டல் இல்லாத மிதமான நடிப்பு, தெளிவான தமிழ் உச்சரிப்பு போன்றவை ஸ்ரீகாந்தை தனித்து அடையாளம் காட்டின.

ஜெயகாந்தனின் எழுத்தில் உருவான இரண்டு முக்கிய திரைப்படங்களான சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகிய இரு படங்களிலும் இவர்தான் நாயகனாக நடித்திருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவர்.

1972-ல் இயக்குநர் திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அவள்’ படத்தின் மூலம் இவர் வில்லனாகவும் அறிமுகமானார்.

ஏறத்தாழ 50 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த ஸ்ரீகாந்த், பின்பு முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன் போன்ற சக ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கத் தயங்கவில்லை.

வில்லன், குணச்சித்திரம் மட்டுமல்ல, நகைச்சுவை கதாபாத்திரத்திலும் ‘காசேதான் கடவுளடா’, ‘பாமா விஜயம்’, ‘காசி யாத்திரை’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சிவாஜியுடன் இவர் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் கவனத்திற்கு உரியதாக மாறின. குறிப்பாக ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில், கண்டிப்பான காவல் அதிகாரியான தன் தந்தையை எதிர்த்து நிற்கும் ‘ஜெகன்’ என்கிற பாத்திரம், ஸ்ரீகாந்த்துக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்தக் காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக ஸ்ரீகாந்த் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் ஒரு படத்தில்கூட இவர் நடித்ததில்லை என்பது ஆச்சரியமான செய்தி.

1975-களுக்குப் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு வில்லனாகவும் நடித்திருந்தார். ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘பைரவி’யில் வில்லன் இவர்தான்.

இதன் பின்பு கிடைத்த படங்களில் கிடைத்த வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் கடைசியாக 2009-ம் ஆண்டில் வெளியான ‘குடியரசு’ என்ற படத்தில் நடித்திருந்தார். கூடவே சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தார்.

இயக்குநர் ஸ்ரீதர் தொடங்கி பாலசந்தர், பீம்சிங், திருலோகசந்தர், முக்தா ஸ்ரீனிவாசன், மாதவன், கிருஷ்ணன் பஞ்சு, திருமுகம் உட்பட முக்கிய இயக்குநர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீகாந்துக்கு தெய்வ பக்தி அதிகம். நம்பியாருடன் சேர்ந்து 40 முறைக்கு மேலாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்.

82 வயதான ஸ்ரீகாந்த் சேத்துப்பட்டில் உள்ள தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு திடீரென்று வீட்டிலேயே காலமானார். இன்று மாலை 5.30 மணிக்கு அவரது உடல் பெசண்ட் நகர் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்திற்காக ரோபோட்ஸ்களுடன் சண்டை போடும் ‘ஜெய்’

ராகுல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.திருக்கடல் உதயம் தயாரித்துள்ள திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. பிரம்மாண்டமான செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் ஜெய்...

இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம்!

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,...

கேரளாவில் விற்பனையாகும் லாட்டரி தொழில் பற்றிய ‘பம்பர்’ திரைப்படம்

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். வேதா பிக்சர்ஸ்...

ஜெய் பீம் படத்தின் டிரெயிலர்

Amazon Prime Video presents, Jai Bhim Official Telugu Trailer Starring Suriya, Prakash Raj, Ramesh, Rajisha Vijayan, Manikandan and Lijo mol Jose Written...