Saturday, July 27, 2024

சினிமா வரலாறு-67 – சிவாஜியின் கன்னத்தைப் பதம் பார்த்த பத்மினி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு நடன நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது மனைவி டி.ஏ.மதுரமும் சென்றிருந்தனர்.

அந்த நாடகத்தில் நாரதர் வேடத்தில் நடனமாடிய பெண்ணின் முக பாவங்களையும், நடனத் திறமையையும் பார்த்து அசந்து போனார் கலைவாணர். நாடகம் முடிந்ததும்  சிறப்பாக நடனமாடியவருக்கு   பரிசளிப்பதற்காக பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று கலைவாணரிடம் வழங்கப்பட்டது.

அந்த வெள்ளிக் கோப்பையை நாரதர் வேடத்திலே  நடனமாடிய அந்தப் பெண்ணுக்கு கொடுக்கக் கலைவாணர் காத்திருந்தபோது கிருஷ்ணர் வேடத்திலே நடனமாடியவருக்கு அந்த கோப்பையை பரிசளிக்கும்படி விழா அமைப்பாளர்கள் அவரிடம் கேட்டுக் கொண்டனர்.

“இந்த நடன நாடகத்தில் ரொம்ப சிறப்பாக நடித்ததும், நடனமாடியதும் நாரதர் வேடத்தில் நடித்த பெண்தான். ஆனால், இவங்க இந்த கோப்பையை கிருஷ்ணர் வேடத்திலே நடிச்சவருக்கு கொடுக்கச் சொல்வதால் நான் இந்தக்  கோப்பையை அவருக்குக் கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கோப்பையை அவரிடம் கொடுத்த கலைவாணர் நாரதர் வேடத்தில் நடித்த அந்தப் பெண்ணை அழைத்து “கலைத் துறையில் உனக்கு மிகப் பெரிய  எதிர்காலம் இருக்கும்மா” என்று வாழ்த்தினார்.

அந்த மேடையில் வாழ்த்தும்போது சொன்ன அந்த  நல்லதொரு எதிர்காலத்தை  அந்த பெண்ணிற்கு அவர்தான் உருவாக்கித் தரப் போகிறார் என்று அந்த பெண்ணிற்கு அப்போது தெரியாது. அந்தப் பெண்ணின் பெயர் பத்மினி.

திருவாங்கூர் சகோதரிகள் என்று பெயர் பெற்றிருந்த லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் நடுவரான நாட்டியப் பேரொளி பத்மினியை கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகம் செய்தவர் கலைவாணர்தான்.

பொதுவாக தென்னிந்திய நடிகைகள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிமுகமாகி அதன் பின்னர் இந்திப்பட உலகிற்கு செல்வார்கள். அவர்களில் இருந்து மாறுபட்டு இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ்ப்பட உலகிற்கு வந்தவர் பத்மினி.

பிரபல நடன மேதையும், பண்டிட் ரவிசங்கரின் சகோதரருமான உதயசங்கர்தான் ‘கல்பனா’ என்ற இந்திப் படத்தில் நடன நடிகையாக பத்மினியை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்.

‘கல்பனா’ படத்தில் பத்மினி ஆடியிருந்த அற்புதமான நடனத்தைப் பார்த்துவிட்டு ‘வேதாள உலகம்’ படத்தில் நடிக்க அவரை ஏவி.எம். அதிபரான  மெய்யப்ப செட்டியார் அழைத்தபோது “படங்களில் நடிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாட்டியம் மட்டும் என்றால் ஆடுகிறோம்” என்றார் பத்மினி.

அதைத் தொடர்ந்து லலிதாவும் பத்மினியும் இணைந்து ஆடிய இரு நடனக் காட்சிகள் ‘வேதாள உலகம்’ படத்தில் இடம் பெற்றன. அந்த நடனக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து பல பட அதிபர்களிடமிருந்து பத்மினிக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

“நடிப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை” என்று ஆரம்பத்தில் சொன்ன அந்த திருவாங்கூர் சகோதரிகள் நடித்த முதல் படமாக ‘பிரசன்னா’ என்ற மலையாளப் படம் அமைந்தது. அதைத் தொடர்ந்து பட்சிராஜா நிறுவனம் தயாரித்த ‘ஏழை படும் பாடு’ படத்தில் லலிதாவுடன் இணைந்து நடித்த பத்மினியை கதாநாயகி ஆக்கிய பெருமை கலைவாணருக்கு சொந்தமானது.

கலைஞர் மு.கருணாநிதியின் கை வண்ணத்தில் கலைவாணர் தயாரித்து இயக்கிய ‘மணமகள்’ படத்தில்தான் முதன்முதலாகக் கதாநாயகியாக அறிமுகமானார் பத்மினி. அவர் நடித்த முதல் படமே மிகச் சிறந்த வெற்றிப் படமாக அமையவே ‘ராசியான கதாநாயகி’ என்ற பெயர் பத்மினிக்குக்  கிடைத்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே ‘பணம்’ படத்தின் தயாரிப்பாளர்களான ஏ.எல்.சீனிவாசனும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் தங்களது படத்தின்  நாயகனாக சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்தனர்.

‘பாரசக்தி’ திரைப்படத்தில் நடிக்க மாதத்திற்கு 250 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவாஜி ‘பணம்’ படத்திலே நடிக்க வாங்கிய சம்பளம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய்.

சிவாஜி கதாநாயகனாக அறிமுகமான முதல் படமான ‘பராசக்தி’க்கும், பத்மினி கதாநாயகியாக அறிமுகமான முதல் படமான ‘மணமகள்’ படத்திற்கும் வசனம் எழுதிய கலைஞர் மு.கருணாநிதியே அவர்கள் இருவரும் முதல்முதலாக இணைந்து நடித்த ‘பணம்’ படத்திற்கும் வசனம் எழுதினார்.

‘மணமகள்’ படப்படிப்பு தளத்தில் பத்மினியை முதல் முதலாக சந்தித்தபோது “பப்பிம்மா… நான் நாடக நடிகனாக இருந்தபோதே உங்கள் படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். அதிலும் ‘மணமகள்’ படத்தில் உங்களது நடிப்பு ரொம்பப் பிரமாதமாக இருந்தது, அப்போதெல்லாம் உங்களை மாதிரி நடிகையோடு எல்லாம் சேர்ந்து நடிப்பேன் என்று நான் கனவுகூட கண்டதில்லை…” என்றார் சிவாஜி.

சிரித்தபடியே சிவாஜியின் பாராட்டுக்களை ஏற்றுக் கொண்ட பத்மினி “கணேஷ், இப்போது சினிமாவில் இளம் கதாநாயகர்களே இல்லை. அந்தக் குறையை போக்குகின்றவிதத்தில் நீங்கள் இப்போது வந்திருக்கிறீர்கள். இப்போது சினிமா உலகில் எல்லோரும் ‘பராசக்தி’ படத்தைப் பற்றிதான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் படத்தின் மூலம் நீங்கள் நிச்சயமாக மிகப் பெரிய புகழைப் பெறுவீர்கள்” என்று சிவாஜிக்கு தன்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

‘பணம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான் சிவாஜி கணேசனுக்கு சுவாமி மலையில் திருமணம் நடைபெற்றது.   சிவாஜி, பத்மினி ஆகிய இருவருக்குமான திருமணக் காட்சியில் நடித்து முடித்து விட்டுத்தான் கமலா அம்மையாரை மணம் முடிக்க சுவாமி மலைக்கு பயணமானார் சிவாஜி.

அதேபோன்று பத்மினிக்கு குருவாயூரில் திருமணம் நடைபெற்ற போதும் ‘செந்தாமரை’ படத்திற்காக விடியற்காலை வரையில் சிவாஜியுடன் ந்டித்துவிட்டுத்தான் விமானம் ஏறினார் பத்மினி.

தமிழ்த் திரையுலகில் மிக நீண்ட காலம் இணைந்து பயணித்த அந்த ஜோடி நடித்த பல திரைப்படங்கள் தமிழ்த் திரையுலகிற்கு இன்றுவரை பெருமை சேர்த்து வருகின்ற படங்கள் என்பதை எவரால் மறுக்க இயலும்…?

சிவாஜியும் பத்மினியும் இணைந்து நடித்த படங்களில் மிகவும் வித்தியாச மான கதை அமைப்பு கொண்ட படம் ‘எதிர்பாராதது’. அந்தக் கதையின்படி கதாநாயகி எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் தன்னுடைய ஆருயிர் காதலனின் தந்தையை மணந்து கொள்ள நேரிடும்.

தன்னுடைய மகன்தான் தன்னுடைய மனைவியின் காதலி என்பதை உணர்ந்து கொள்ளும் தந்தை அந்த சோகத்திலேயே உயிரை விட்டுவிட… கதாநாயகியின் அண்ணனும், அவரது மனைவியும் காதலர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், அதை ஏற்க மறுத்து கதாநாயகி விதவைக் கோலம் பூணுகிறாள். ஸ்ரீதர் எழுதிய அந்த புரட்சிகரமான கதையில் கதானாயகனாக சிவாஜியும், கதாநாயகியாக பத்மினியும் நடித்தனர் .

நீண்ட நாட்களுக்குப் பிறகு காதலர்கள் இருவரும் சந்திக்கும் ஒரு தருணத்தில் நாயகனான சிவாஜி உணர்ச்சிவசப்பட வேறு ஒருவருக்கு மனைவியாக உள்ள நாயகி பத்மினி சிவாஜியை அடிப்பது போன்ற ஒரு காட்சியை ‘எதிர்பாராதது’ படத்துக்காக படமாக்க அதன் இயக்குநர் நாராயணமூர்த்தி திட்டமிட்டபோது அந்தக் காட்சியில் நடிக்க பத்மினி மறுத்தார்.

‘எதிர்பாராது’ படம் உருவான காலக்கட்டத்தில் சிவாஜிக்கென்று ஏராளமான ரசிகர்கள் உருவாகியிருந்ததுதான் அதற்கு முக்கியமான காரணம். “நான் சிவாஜியை அடிப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தவிர தனிப்பட்ட முறையிலேயும் எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. ஆகவே அவரை நான் அடிக்க மாட்டேன்…” என்றார் பத்மினி.

படத்தின் உயிர்நாடியே அந்தக் காட்சிதான் என்பதால் “இந்தக் காட்சி இல்லையென்றால் படத்தின் வெற்றியே கேள்விக் குறியாகிவிடும். நீங்கள் சொன்னால்தான் பத்மினி இந்தக் காட்சியில் நடிக்க ஒப்புக் கொள்வார். ஆகவே, நீங்கள்தான் பத்மினியிடம் பேசி இந்தக் காட்சியில் நடிக்க அவரை சம்மதிக்க வைக்க வேண்டும்” என்று சிவாஜியிடம் படத்தின் இயக்குநரான நாராயணமூர்த்தி  கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி பத்மினியிடம் எடுத்துச் சொல்லி அவரை அந்தக் காட்சியில் நடிக்க வைத்தார் சிவாஜி.

அந்தச் செய்கையின் மூலம் எவ்வளவு பெரிய விபரீதத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறோம் என்பதை சிவாஜி அப்போது அறியவில்லை. அந்தக் காட்சியின் படப்பிடிப்பு தொடங்கியது.

இயக்குநர் “ஆக்ஷன்” என்றவுடன் பத்மினியின் கையை சிவாஜி பிடித்தார். அடுத்த நொடி பத்மினிக்கு அந்த ஆவேசம் எங்கிருந்து வந்தது என்பது எவருக்கும் தெரியாது. சிவாஜியின் இரு கன்னங்களிலும் மாறி மாறி அடிக்கத் தொடங்கினார் அவர். அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இறங்க சிவாஜியின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது.

காட்சி மிகச் சிறப்பாக அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் இயக்குநர் கட் சொல்ல மறந்து ரசித்துக் கொண்டு இருக்க  பத்மினியின் அடியைத்  தாங்க முடியாத சிவாஜி ‘கட் கட்’ என்று சத்தம் போட்டு படப்பிடிப்பை நிறுத்தினார்.

படப்பிடிப்பு முடிந்தும்  பத்மினியின் ஆவேசம் அடங்கவில்லை. ஆகவே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். “பத்மினிக்கு ஊசி போடுவது, கை கால்களைத் தேய்த்துவிடுவது விடுவது என்று எல்லோரும் என்னை அடித்த பத்மினியை அக்கறையோடு கவனித்துக் கொண்டார்களே… தவிர அடிபட்ட என்னைப் பற்றி ஒருவரும் கவலைப்படவில்லை” என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி.

மிக அதிகமான படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த சிவாஜிக்கும், பத்மினிக்கும் இடையே இது போன்ற பல சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News